மேஜையில் இருந்த பணத்தை லஞ்சமாக கருதமுடியாது: அரசு ஊழியருக்கு எதிரான லஞ்ச வழக்கு தள்ளுபடி- கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி


மேஜையில் இருந்த பணத்தை லஞ்சமாக கருதமுடியாது: அரசு ஊழியருக்கு எதிரான லஞ்ச வழக்கு தள்ளுபடி- கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி
x
தினத்தந்தி 5 Dec 2022 6:45 PM GMT (Updated: 5 Dec 2022 6:45 PM GMT)

சோதனையின்போது மேஜையில் இருந்த பணத்தை லஞ்சமாக கருத முடியாது என கூறி அரசு ஊழியர் மீது தொடரப்பட்ட லஞ்ச வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:

ரூ.5 ஆயிரம் லஞ்சம்

சித்ரதுர்கா மாவட்டம் ஒசதுர்காவை சேர்ந்தவர் குருபிரசாத். தொழிலாளி. இவர் தனக்கு சொந்தமான நிலத்தை கூட்டுறவு வங்கியில் அடமானம் வைத்து கடன் பெறுவதற்கு திட்டமிட்டார். இதற்காக அவர் அந்த நிலத்தை கூட்டுறவு சங்கத்தின் பெயரில் பதிவு செய்வதற்காக பதிவுத்துறை அலுவலகத்திற்கு சென்றார்.

அங்கு முதல்நிலை உதவியாளராக பணி செய்து வந்த மஞ்சுநாத் என்பவரிடம் அதுகுறித்து கேட்டபோது, ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் அந்த பணிகளை துரிதமாக செய்து கொடுப்பதாக அவர் கூறி உள்ளார். ஆனால் குருபிரசாத்திற்கு லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லை. உடனே அவர் இதுகுறித்து அப்போது செயல்பாட்டில் இருந்த ஊழல்தடுப்பு படை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அவர்கள் கொடுத்த அறிவுரையின்படி மஞ்சுநாத்திடம், ரூ.5 ஆயிரத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது.

வழக்கு தள்ளுபடி

இதையடுத்து ஊழல்தடுப்பு படை அதிகாரிகள் மஞ்சுநாத் அலுவலத்தில் சோதனை செய்தனர். அப்போது மேஜையில் இருந்து ரூ.5 ஆயிரத்தை கைப்பற்றினர். இதையடுத்து லஞ்சம் வாங்கியதாக மஞ்சுநாத்தை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு கர்நாடக ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, குற்றம் சுமத்தப்பட்டவரை லஞ்சம் பெற்றபோது கைது செய்யவில்லை.

மாறாக அவரது மேஜையில் லஞ்சப்பணம் இருந்ததும், அதை அதிகாரிகள் பறிமுதல் செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டதும் தெரியவந்தது. லஞ்சம் கேட்பதோ, லஞ்சம் கொடுப்பதோ குறிப்பிட்ட நபர் லஞ்சம் வாங்கியதற்கு ஆதாரமாக கருத முடியாது. எனவே மஞ்சுநாத் லஞ்சம் வாங்கிய போது கையும், களவுமாக அதிகாரிகள் கைது செய்யவில்லை. எனவே அவர் மீது தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி அதிரடி உத்தரவிட்டார்.


Next Story