பூக்கடையில் புகுந்து ரூ.9 லட்சம் திருட்டு


பூக்கடையில் புகுந்து ரூ.9 லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 18 Nov 2022 6:45 PM GMT (Updated: 18 Nov 2022 6:46 PM GMT)

மங்களூருவில் பூக்கடையில் புகுந்து ரூ.9 லட்சத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மங்களூரு:

பூக்கடை

மங்களூரு நகர் கே.எஸ்.ராவ் ரோட்டில் பூக்கடை ஒன்று உள்ளது. கங்கனாடியை சேர்ந்த உம்மரப்பா என்பவர் கடந்த 12 ஆண்டுகளாக பூக்கள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை உம்மரப்பா கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் இரவில், கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை திருடி சென்றுவிட்டனர்.

நேற்று காலை உம்மரப்பாவின் மகன் ரியாஸ், வழக்கம் போல கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

ரூ.9 லட்சம் திருட்டு

பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தார். இதையடுத்து கல்லா பெட்டியில் பார்த்தபோது, அதில் இருந்த ரூ.9 லட்சம் ரொக்கம் மாயமாகி இருந்தது. பூக்கள் சப்ளை செய்த விவசாயிகளுக்கு கொடுப்பதற்காக உம்மரப்பா ரூ.9 லட்சத்தை கல்லாப்பெட்டியில் வைத்து சென்றிருந்தார். ஆனால் யாரோ மர்மநபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ரூ.9 லட்சத்தை திருடி சென்றுவிட்டது தெரியவந்தது.

மேலும் கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா மற்றும் டி.வி.ஆர். கருவி ஆகியவற்றையும் மர்மநபர்கள் திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து பந்தர் போலீசில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பாா்வையிட்டனர்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

பின்னர் தடயவியல் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்து ஆய்வுக்காக அனுப்பி உள்ளனர். உம்மரப்பா வழக்கமாக கடையில் பணத்தை வைத்துவிட்டு செல்லமாட்டார். ஆனால் மறுநாள் காலையில் பூக்கள் சப்ளை செய்த விவசாயிகளுக்கு பணம் கொடுக்க வேண்டி இருந்ததால், கடையில் ரூ.9 லட்சத்தை வைத்து சென்றிருந்தார். இதனை அறிந்த நபர்களே கைவரிசை காட்டியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுகுறித்து பந்தர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story