வாளி நீரில் அமுக்கி 8 வயது சிறுவன் கொடூர கொலை; நரபலியா...? என போலீசார் விசாரணை
தெலுங்கானாவில் ரம்ஜான் விரதம் இருந்த சிறுவனை வாளி நீரில் அமுக்கி, மூச்சு திணற செய்து கொடூர கொலை செய்த வழக்கில் நரபலியா...? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐதராபாத்,
தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் அலாவுதீன் கோட்டி என்ற பகுதியை சேர்ந்தவர் வாசீம் கான். ஆயத்த ஆடை தொழிலில் ஈடுபட்டு உள்ளார். அந்த பகுதியை சேர்ந்த பிசா கான் என்ற இம்ரான் என்ற திருநங்கை சீட்டுக்கு பணம் பிடிக்கும் தொழில் செய்து வந்து உள்ளார்.
இந்நிலையில், வாசீம் கானின் மகனான 8 வயது சிறுவன் அப்துல் வகீத் கடந்த வியாழ கிழமை மாலை காணாமல் போயுள்ளான். இதுபற்றி வாசீம் புகார் அளித்து உள்ளார். இந்நிலையில், கடந்த வெள்ளி கிழமை சாக்கடை ஒன்றில் இருந்து சிறுவன் அப்துலின் உடல் கிடைத்து உள்ளது.
இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. சிறுவன் அப்துல் ரம்ஜானுக்காக விரதம் இருந்த நிலையில், பிசா கான் சிறுவனை குடிக்க குளிர்பானம் வாங்கி வரும்படி கேட்டு உள்ளார்.
சிறுவன் அப்துல், அதனை கொண்டு கொடுப்பதற்காக பிசா கானின் வீட்டுக்குள் போனதும் சிறுவனை பிசா கான் பிடித்து வைத்து கொண்டார்.
அதன்பின்னர், எடுத்து வைத்திருந்த நீர் நிரம்பிய வாளியில் சிறுவனை அமுக்கி, மூச்சு திணற செய்து கொடூர முறையில் கொலை செய்து உள்ளார். இதனை உறுதிப்படுத்தி கொண்டபின், ஆட்டோ ஓட்டுநர் உதவியுடன் சிறுவனின் உடலை வாளியில் அமுக்கி, யாருக்கும் தெரிய கூடாது என்பதற்காக அதனை ஒரு பையில் அடைத்து, சனத்நகர் பகுதியில் உள்ள சாக்கடையில் வீசியுள்ளார்.
சீட்டு பணம் கொடுக்கல், வாங்கலில் இந்த கொலை நடந்து உள்ளது என போலீசார் சந்தேகிக்கின்றனர். எனினும், சிறுவனின் உடலில் பல பகுதிகளில் எலும்புகள் நொறுங்கி போயுள்ள நிலையில், அப்துலின் குடும்பத்தினர் நரபலி என சந்தேகம் தெரிவித்து உள்ளனர்.
சிறுவன் உடல் கிடைத்ததும், பிசா கானின் வீட்டை அவர்கள் உடைத்து உள்ளே சென்று பார்த்து உள்ளனர். இதில், வீட்டுக்குள் நரபலி நடந்ததற்கான தடயங்கள் உள்ளன என கூறி அந்த கோணத்திலும் விசாரணை நடத்தும்படி போலீசாரிடம் கேட்டு கொண்டுள்ளனர்.
விலங்குகள் நல மந்திரி ஸ்ரீனிவாச யாதவ் அந்த பகுதியை பார்வையிட்டு சென்று உள்ளார். இந்த சம்பவத்தில், குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது என பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அவர் உறுதி கூறியுள்ளார்.