மகளின் அந்தரங்க வீடியோவை வெளியிட்ட சிறுவன்: தட்டிக்கேட்க சென்ற பாதுகாப்புப்படை வீரர் அடித்துக்கொலை


மகளின் அந்தரங்க வீடியோவை வெளியிட்ட சிறுவன்: தட்டிக்கேட்க சென்ற பாதுகாப்புப்படை வீரர் அடித்துக்கொலை
x

மகளின் அந்தரங்க வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதை தட்டிக்கேட்க எல்லைப்பாதுகாப்பு படை வீரர் சென்றுள்ளார்

காந்திநகர்,

குஜராத் மாநிலம் நடியட் மாவட்டம் சக்லாசி கிராமத்தை சேர்ந்தவர் மெல்ஜிபாய் வாஹிலா. இவர் இந்திய எல்லைப்பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார்.

அவருக்கு 15 வயதில் மகள் உள்ளார். இதனிடையே, வாஹிலாவின் மகள் தான் படிக்கும் பள்ளியில் பயின்றுவரும் 15 வயதான சக மாணவனுடன் காதலில் இருந்துள்ளார்.

இதனிடையே, காதலனான அந்த சிறுவன் கடந்த சில நாட்களுக்கு முன் வாஹிலாவின் மகளான சிறுமியின் அந்தரங்க வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவேற்றியுள்ளான்.

இது குறித்து அறிந்த வாஹிலா தனது மகளின் அந்தரங்க வீடியோக்களை சமூகவலைதளத்தில் பதிவேற்றிய 15 வயது சிறுவனின் வீட்டிற்கு கடந்த சனிக்கிழமை இரவு சென்றுள்ளார்.

வாஹிலா தனது மனைவி, 2 மகன்கள் மற்றும் குடும்ப உறவினர் ஒருவருடன் அந்த சிறுவனின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, தனது மகளின் அந்தரங்க வீடியோவை சிறுவன் சமூகவலைதளத்தில் வெளியிட்டது குறித்து வாஹிலா அந்த சிறுவனின் குடும்பத்திடம் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

அப்போது, சிறுவனின் குடும்பத்தினர் வாஹிலா, அவரது மனைவி, மகன்கள், உறவினரை கூர்மையான ஆயுதங்கள், கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்த எல்லைப்பாதுகாப்பு படை வீரர் வாஹிலா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். வாஹிலாவின் மகனும் படுகாயமடைந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து வாஹிலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சிறுவனின் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகளின் அந்தரங்க வீடியோக்களை சமூகவலைதளத்தில் பதிவிட்ட சிறுவனை கண்டிக்க சென்ற எல்லைப்பாதுகாப்பு படை வீரர் வாஹிலாவை சிறுவனின் குடும்ப உறுப்பினர்கள் அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story