பெங்களூருவில் 13-வது மாடியில் இருந்து குதித்து பி.யூ. கல்லூரி மாணவி தற்கொலை


பெங்களூருவில் 13-வது மாடியில் இருந்து குதித்து பி.யூ. கல்லூரி மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 23 Sept 2023 12:15 AM IST (Updated: 23 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஆற்றில் விழுந்து உயிரை மாய்க்க முயன்று மீட்கப்பட்ட நிலையில் குடியிருப்பின் 13-வது மாடியில் இருந்து குதித்து பி.யூ. கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

பெங்களூரு:

பெங்களூரு நாகரபாவி பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 17). இவர் அதே பகுதியில் உள்ள பி.யூ.கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வீட்டில் யாரிடமும் மாணவி பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் மனஉளைச்சலில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து விஜயலட்சுமி மாயமானார். இதனால் பயந்துபோன பெற்றோர் அக்கம்பக்கத்தில் அவரை தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து உடனடியாக ஞானபாரதி போலீசில் அவர்கள் புகார் அளித்தனர்.

இதையடுத்து போலீசார், மாயமான விஜயலட்சுமி குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே விஜயலட்சுமி, தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடிக்கு பஸ்சில் சென்றுள்ளார். அங்கிருந்து அவர் தர்மஸ்தலாவுக்கு சென்று, அங்கு ஓடும் நேத்ராவதி ஆற்றுக்கு சென்றார். மேலும் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் இருந்த வயதானவர் ஒருவர், விஜயலட்சுமியை மீட்டார்.

பின்னர் அவர் கொடுத்த தகவலின்பேரில் பெங்களூரு போலீசார், பெற்றோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். மேலும் விஜயலட்சுமியை மீட்டு, சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை பெங்களூருவுக்கு அழைத்து வந்தனர்.

மேலும் தற்கொலை எண்ணங்கள் வராமல் இருப்பதற்காக ஆலோசனைகள் வழங்கப்பட்டன. எனினும் விஜயலட்சுமி வீட்டில் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்த நிலையில் நாகரபாவி மைசூரு சாலையில் உள்ள குடியிருப்பு ஒன்றுக்கு மாணவி தனியாக சென்றார். பின்னர் அந்த கட்டிடத்தின் 13-வது மாடிக்கு சென்ற மாணவி, அங்கிருந்து திடீரென குதித்தார்.

இதில் தரைதளத்தில் விழுந்த விஜயலட்சுமி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அங்கிருந்தவர்கள் பேடராயனபுரா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் அவர்கள், தற்கொலை செய்த விஜயலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் விஜயலட்சமி கடந்த சில வாரங்களாக மனஉளைச்சலில் இருந்ததாகவும், இதனால் தர்மஸ்தலாவுக்கு சென்று ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதும், அதிர்ஷ்டவசமாக முதியவரால் அவர் மீட்கப்பட்டு மனநல ஆலோசனை வழங்கப்பட்டதும் தெரிந்தது.

இந்த நிலையில் வீட்டில் இருந்தபோது குடியிருப்பின் 13-வது மாடிக்கு சென்று அவர் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரிந்தது. இதுகுறித்து பேடராயனபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆற்றில் குதித்து உயிரை மாய்க்க முயன்று மீட்கப்பட்ட நிலையில் பி.யூ.கல்லூரி மாணவி 13-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


Next Story