2023-24-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட் ஜூலை 7-ந் தேதி தாக்கல்


2023-24-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட் ஜூலை 7-ந் தேதி தாக்கல்
x

2023-24-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட் கூட்டத்தொடர் அடுத்த மாதம் (ஜூலை) 3-ந்தேதி தொடங்கும் என்றும், 7-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.

பெங்களூரு:

2023-24-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட் கூட்டத்தொடர் அடுத்த மாதம் (ஜூலை) 3-ந்தேதி தொடங்கும் என்றும், 7-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.

கர்நாடக பட்ஜெட்

கர்நாடக முதல்-மந்திரியாக இருந்த பசவராஜ் பொம்மை கடந்த மார்ச் மாதத்தில் 2023-24-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சுமார் ரூ.3¼ லட்சம் கோடி அளவுக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் சட்டசபை தேர்தல் காரணமாக அந்த பட்ஜெட் அமலுக்கு வரவில்லை. இந்த நிலையில் கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. முதல்-மந்திரியாக சித்தராமையா பதவி ஏற்றுள்ளார்.

இந்த நிலையில் 2023-24-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட் அடுத்த மாதம் (ஜூலை) 7-ந் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சித்தராமையா அறிவித்துள்ளார். முதல்-மந்திரி சித்தராமையா நேற்று தாவணகெரே மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது இதுகுறித்து அவர் நிருபா்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

விவரங்கள் தெரியவரும்

நாங்கள் 2023-24-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளோம். இதற்காக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் அனேகமாக வருகிற ஜூலை 3-ந் தேதி தொடங்கும். அதைத்தொடர்ந்து 7-ந் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்வோம். பட்ஜெட் அளவு எவ்வளவு என்பதை தற்போது என்னால் கூற முடியாது. பட்ஜெட் தயாரிப்புகள் பணிகள் தொடங்கும்போது இதுகுறித்த விவரங்கள் தெரியவரும்.

பசுவதை தடை சட்டம் 1964-ம் ஆண்டில் இருந்தே அமலில் உள்ளது. அதில் 12 வயதாகும் மாடுகள் மற்றும் விவசாயத்திற்கு பயன் இல்லாத மாடுசுகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பிறகு அந்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு விதைகள், உரங்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும் பருவமழை காலத்தில் வெள்ளம் ஏற்பட்டால், அதை எதிர்கொள்ள தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளேன்.

சம்பள பாக்கி

மின் கட்டண உயர்வு குறித்து கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஏற்கனவே முடிவு செய்துள்ளது. அந்த முடிவை தற்போது அமல்படுத்தியுள்ளனர். இந்திரா உணவகங்களை மீண்டும் திறக்க தேவையான ஏற்பாடுகளை செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த உணவக ஊழியர்களுக்கு சம்பள பாக்கி இருந்தால் அதை பட்டுவாடா செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நான் முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பிறகு முதல் சுற்றுப்பயணமாக தாவணகெரேவுக்கு வந்துள்ளேன்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

14-வது முறையாக...

இந்த கர்நாடக பட்ஜெட்டை நிதித்துறையை தன்வசம் வைத்துள்ள சித்தராமையா தாக்கல் செய்ய உள்ளார். ஏற்கனவே அவர் 13 முறை கர்நாடக பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். தற்போது சித்தராமையா 14-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story