மராட்டிய பேருந்து விபத்து எதிரொலி; சம்ருத்தி விரைவுச்சாலையில் அனைத்து வாகனங்களிலும் போலீசார் பாதுகாப்பு சோதனை
மராட்டிய பேருந்து விபத்து நிகழ்ந்த சம்ருத்தி விரைவுச்சாலையில் அனைத்து வாகனங்களும் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டே பிறகு செல்ல அனுமதிக்கப்படுகிறது.
நாக்பூர்,
மராட்டியத்தின் புல்தானா மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இந்த கோரவிபத்தில் 11 ஆண்கள், 14 பெண்கள் என 25 பேர் பலியாகினர். இதில் 10 பேர் வார்தாவையும், 7 பேர் புனேவையும், 4 பேர் நாக்பூரையும், 2 பேர் யவத்மாலையும், 2 பேர் வாசிமையும் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதிஷ்டவசமாக இந்த பயங்கர விபத்தில் டிரைவர், கிளீனர் உட்பட 8 பேர் உயிர் தப்பினர். விபத்துக்குள்ளான இந்த தனியார் பேருந்துக்கு, ஒன்பது மணி நேரத்திற்குப் பிறகு மாசுக்கட்டுப்பாட்டின் கீழ் சான்றிதழ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கூடுதல் டைரக்டர் ஜெனரல் (போக்குவரத்து) ரவீந்திர குமார் சிங்கால் அறிவுறுத்தலின்படி, கடந்த இரண்டு நாட்களாக நெடுஞ்சாலைத்துறை போலீசார் சம்ருத்தி விரைவு சாலையில் செல்லும் 98 பேருந்துகள் உட்பட ஒவ்வொரு வாகனத்தினையும் சோதனை செய்து வருகின்றனர்.
அதாவது டயர்களின் நிலை, டயர்களில் உள்ள நைட்ரஜன்/காற்றழுத்தம், இருக்கை வசதி, அவசரகால ஜன்னல்கள், தீயணைப்பு கருவிகள் போன்றவற்றை சரிபார்த்தனர். பேருந்தில் இரண்டு டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் இருக்கிறார்களா? இல்லையா? என்றும், சரியான ஆவணங்கள் உள்ளதா? என்றும் ஆய்வு செய்தனர். மேலும் போலீசார் பயணிகளிடம் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.