உத்தரகாண்டில் பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்: 3 பேர் உயிரிழப்பு; 18 பேர் காயம்

உத்தரகாண்டில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்ததில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர். 18 பேர் காயம் அடைந்தனர்.
நைனிடால்,
உத்தரகாண்டின் நைனிடால் நகரில் இருந்து கலாதுங்கி நோக்கி பஸ் ஒன்று நேற்றிரவு வந்து கொண்டிருந்தது. கலாதுங்கி சாலையில் கத்காட் பகுதியருகே வந்தபோது, அந்த பஸ் திடீரென சாலையோரம் பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பஸ்சில் இருந்த பயணிகள் சிக்கி கொண்டனர். அவர்கள் உதவி கேட்டு கூச்சலிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும், மாநில பேரிடர் பொறுப்பு படை, தீயணைப்பு துறை மற்றும் நைனிடால் போலீசார் உள்ளிட்டோர் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றனர்.
தொடர்ந்து, மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டது. அந்த பஸ்சில் 32 பேர் இருந்துள்ளனர். 28 பேர் மீட்கப்பட்டனர். விபத்தில் 18 பேர் காயமடைந்து உள்ளனர். காயமடைந்தவர்கள் ஹல்த்வானி பகுதியில் உள்ள சுஷீலா திவாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்தில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர். ஒன்றிரண்டு பேர் இன்னும் சிக்கியிருக்க கூடும் என கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.