பெங்களூருவில் ஏ.சி. பஸ் பாஸ் கட்டணம் திடீர் உயர்வு


பெங்களூருவில் ஏ.சி. பஸ் பாஸ் கட்டணம் திடீர் உயர்வு
x

பெங்களூருவில் ஏ.சி. பஸ்களில் பாஸ் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.

பெங்களூரு:

பெங்களூருவில் ஏ.சி. பஸ்களில் பாஸ் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.

கூடுதல் கட்டணம்

பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம்(பி.எம்.டி.சி.) பெங்களூருவில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு டவுன் பஸ்களை இயக்கி வருகிறது. நகரில் சுமார் 6,500 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சாதாரண பஸ்கள் மட்டுமின்றி அதிக கட்டணத்துடன் குளுகுளு வசதி கொண்ட ஏ.சி. பஸ்களும் இயக்கப்படுகின்றன. இந்த ஏ.சி. பஸ்கள் முக்கியமாக மென்பொருள் நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ள பகுதிகளுக்கு அதிகமாக இயக்கப்படுகின்றன.

அந்த ஏ.சி. பஸ்களில் பயணிக்க தினசரி மற்றும் மாதாந்திர பாஸ் வழங்கப்படுகிறது. தினசரி பாஸ் விலை ரூ.100, மாதாந்திர பாஸ் ரூ.1,500 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் சாதாரண பஸ்களில் பயணிக்க பாஸ் பயன்படுத்துகிறவா்கள் மற்றும் மூத்த குடிமக்கள் அந்த ஏ.சி. பஸ்களில் பயணித்தால் கூடுதலாக ரூ.20 வழங்க வேண்டும். அவர்கள் ஞாயிற்றுக்கிழமை நாளில் ஏ.சி. பஸ்களில் கூடுதல் கட்டணம் செலுத்தாமல் பயணிக்கலாம் என்ற சலுகை வழங்கப்பட்டு இருந்தது.

தினசரி-மாதாந்திர பாஸ்

இந்த நிலையில் ஏ.சி.பஸ்களில் பயணிப்பதற்கான தினசரி-மாதாந்திர பாஸ் கட்டணத்தை பி.எம்.டி.சி. திடீரென உயர்த்தியுள்ளது. அதாவது தினசரி பாஸ் கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.120 ஆகவும், மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.1,500-ல் இருந்து ரூ.1,800 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் சாதாரண பஸ் பாஸ் வைத்திருப்பவர்கள் ஏ.சி.பஸ்களில் பயணிக்க இனி கூடுதலாக ரூ.25 வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சாதாரண பாஸ் வைத்திப்பவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இலவசமாக பயணிக்கும் சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த நாளில் பயணித்தாலும் கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று பி.எம்.டி.சி. கூறியுள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் நிதி நிலையை கருத்தில் கொண்டு கட்டணத்தை உயர்த்தி இருப்பதாக பி.எம்.டி.சி. தெரிவித்துள்ளது.


Next Story