"பிரசாந்த் கிஷோர் பாஜகவுக்காக வேலை செய்கிறார்" - ராஜீவ் ரஞ்சன் சிங்


பிரசாந்த் கிஷோர் பாஜகவுக்காக வேலை செய்கிறார் - ராஜீவ் ரஞ்சன் சிங்
x

பிரசாந்த் கிஷோர் பாஜகவுக்காக வேலை செய்கிறார் என ஐக்கிய ஜனதா தள கட்சியின் தேசிய தலைவர் ராஜீவ் ரஞ்சன் லாலன் சிங் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், பீகாரில் 5 லட்சம் முதல் பத்து லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கினால் தன்னுடைய ஜன் சூரஜ் அபியான் பிரச்சாரத்தை வாபஸ்பெற்று நிதிஷ்குமாருக்கு ஆதரவளிக்க தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிலையில், பிரசாந்த் கிஷோர் ஒரு விளம்பர நிபுணர் என்றும் பா.ஜ.க.வுக்கு உதவ அவர் விரும்புகிறார் என முதல்-மந்திரி நிதிஷ் விமர்சித்தார்.

இது தொடர்பாக ஐக்கிய ஜனதா தள கட்சியின் தேசிய தலைவர் ராஜீவ் ரஞ்சன் லாலன் சிங் கூறுகையில், "பீகாரில் புதிய அரசியல் சூழ்நிலை உருவான பிறகு, முதல்-மந்திரி நிதிஷ்குமாரை சந்திக்க பிரசாந்த் கிஷோர் விரும்பினார். முதலில் கட்சித் தலைவருடன் ஒரு வார்த்தை பேசுங்கள் என்று நிதிஷ்குமார் கூறினார்.

நாங்கள் டெல்லியில் சுமார் ஒன்றரை மணிநேரம் பேசினோம். கட்சியின் கட்டுப்பாடுக்கு உட்பட்டு இருந்தால் மீண்டும் கட்சியில் இணைந்து பணியாற்றலாம் என கூறினேன். முதல்-மந்திரியும் அவரை சந்திக்க மாலை 4 மணிக்கு நேரம் ஒதுக்கினார், ஆனால் அவரின் மார்க்கெட்டிங் உத்தியின் ஒரு பகுதியாக, 2 மணிக்கு ஊடகங்களை அழைத்து முதல்-மந்திரியை சந்திக்க போவதில்லை என தெரிவித்தார்.

அவர் ஊடகங்களில் கதை விடுகிறார். இவை அனைத்தும் பீகாரில் காலூன்றுவதற்கு பாஜக விரும்பும் ஒரு சதியின் ஒரு பகுதியாகும், அதனால் மக்கள் ஆதரவைப் பெற முடியாது. பிரசாந்த் கிஷோர் அரசியல்வாதி அல்ல அவர் ஒரு தொழிலதிபர். அவர் தனது வியாபாரத்தை அதிகரிக்க மார்க்கெட்டிங் செய்கிறார். கட்சியில் இணைய அவருக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. அவரே முதல்-மந்திரியை சந்திக்க விரும்பினார். " இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story