போலீஸ் நிலையத்தில் உள்ள வழக்கால் அரசு பணியில் சேர முடியாததால் தூக்குப்போட்டு பெண் தற்கொலை


போலீஸ் நிலையத்தில் உள்ள வழக்கால்  அரசு பணியில் சேர முடியாததால் தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x

சித்ரதுர்கா அருகே போலீஸ் நிலையத்தில் உள்ள வழக்கால், அரசு பணியில் சேர முடியாததால் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது.

சித்ரதுர்கா: சித்ரதுர்கா அருகே போலீஸ் நிலையத்தில் உள்ள வழக்கால், அரசு பணியில் சேர முடியாததால் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது.

அரசு வேலை

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் பரசுராம்புரா போலீஸ் எல்லைக்குட்பட்ட காமனதுர்காவை சேர்ந்தவர் உஷா (வயது 22). இவருக்கும், கொண்டேனஹள்ளி கிராமத்தை சேர்ந்த கணேஷ் என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்தது முதல் உஷா, கொண்டேனஹள்ளி கிராமத்தில் கணவனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் உஷா அரசு வேலைக்காக படித்து கொண்டிருந்தார். சமீபத்தில் நீதிமன்ற ஊழியர் பணிக்கு தேர்வு எழுதினார். இதில் தேர்ச்சி பெற்றதாக கூறப்படுகிறது. அதன்படி அவருக்கு வேலைக்கு சேரும்படி பணி உத்தரவு ஆணையும் வந்தது. வேலைக்கு சேருவதற்கு முன்னதாக, போலீஸ் நிலையத்தில் எந்தவிதமான வழக்கும் நிலுவையில் இல்லை என்று தடையில்லா சான்றிதழ் வழங்கவேண்டும்.

ரூ.50 ஆயிரம் லஞ்சம்

இந்த தடையில்லா சான்றிதழ் வாங்குவதற்காக உஷா, பரசுராம்புரா போலீஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது போலீஸ் நிலையத்தில் உஷா மீது ஒரு வழக்கு பதிவாகி உள்ளது. அதாவது காமனதுர்காவில் மரத்தில் புளி பறிக்கும்போது ஏற்பட்ட தகராறு தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவாகி இருந்துள்ளது.

இந்த வழக்கில் இருந்து விடுபடவேண்டும் என்றால் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வழங்கவேண்டும் என்று போலீசார் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பணத்தை உஷாவால் கொடுக்க முடியவில்லை. இதனால் தடையில்லா சான்றிதழ் பெற முடியாத நிலை உருவானது. இதன்காரணமாக அரசு வேலை கிடைக்காது என்று நினைத்து உஷா மனமுடைந்து காணப்பட்டார்.

தற்கொலை

இந்த நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது உஷா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பரசுராம்புரா போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அரசு வேலை கிடைக்க போலீஸ் நிலையத்தில் உள்ள வழக்கு தடையாக இருந்ததால் உஷா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து பரசுராம்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



Next Story