கர்நாடக பா.ஜனதா புதிய தலைவராக பி.ஒய்.விஜயேந்திரா நியமனம்


கர்நாடக பா.ஜனதா புதிய தலைவராக பி.ஒய்.விஜயேந்திரா நியமனம்
x

சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு கட்சியின் மாநில தலைவரை மாற்றிவிட்டு புதிய தலைவரை நியமிக்க பா.ஜனதா மேலிடம் முடிவு செய்தது.

பெங்களூரு,

கர்நாடக சடட்சபைக்கு கடந்த மே மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளுங்கட்சியாக இருந்த பா.ஜனதா 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழந்தது. எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் 135 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தென்மாநிலங்களில் கர்நாடகத்தில் மட்டுமே ஆட்சியில் இருந்த பா.ஜனதா ஆட்சியை இழந்ததால் அக்கட்சி மேலிட தலைவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த தோல்விக்கு பிறகு கட்சியின் மாநில தலைவரை மாற்றிவிட்டு புதிய தலைவரை நியமிக்க பா.ஜனதா மேலிடம் முடிவு செய்தது. ஆனால் யாருக்கு கட்சியின் தலைவர் பதவி வழங்குவது என்பது குறித்து அக்கட்சி மேலிடத்தால் முடிவு செய்ய முடியவில்லை. கட்சி தலைவர் பதவிக்கு முன்னாள் மந்திரி சி.டி.ரவி, மத்திய மந்திரி ஷோபா, விஜயேந்திரா, முன்னாள் மந்திரி சுனில்குமார் உள்ளிட் பலரின் பெயர்கள் அடிபட்டன. ஆனால் இதில் யாரை கட்சி தலைவராக நியமிப்பது என்பதை முடிவு செய்வதில் இழுபறி நிலை நீடித்து வந்தது.

இந்த நிலையில் கர்நாடக பா.ஜனதா புதிய தலைவராக பி.ஒய்.விஜயேந்திரா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் அருண்சிங் வெளியிட்டுள்ளார். அவர் கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் 2-வது மகன் ஆவார்.


Next Story