"பை...பை.. மோடி" - ஐதராபாத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக பேனர்கள்
ஆறு மாதங்களில் மூன்றாவது முறையாக பிரதமர் மோடியை தெலுங்கான முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐதாராபாத்,
ஐதராபாத்தில் இன்றும் நாளையும் பிரமாண்டமாக நடைபெறும் தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி, பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் பாரதிய ஜனதா ஆளும் மாநிலத்தை சேர்ந்த முதல்-மந்திரிகள், கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதையொட்டி ஐதராபாத் நகரம் முழுவதும் பிரதமர் மோடியை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. இன்று பிற்பகல் இந்த செயற்குழு கூட்டம் தொடங்குகிறது. ஜே.பி. நட்டா தொடக்க உரை நிகழ்த்துகிறார். நாளை (3-ந் தேதி) பிரமாண்ட பேரணி, மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
இதையொட்டி அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஐதராபாத் வருகிறார். மரபுபடி பிரதமர் வருகையின் போது அவரை அந்தந்த மாநில முதல்-மந்திரிகள் வரவேற்பது வழக்கம். ஆனால் தெலுங்கானா முதல்-மந்திரியும் , தெலுங்கானா ராஷ்ட்ரிய தலைவருமான சந்திரசேகர ராவ் பிரதமர் வருகையை புறக்கணிக்க முடிவு செய்து உள்ளார்.
தேசிய அளவில் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் சந்திரசேகர ராவ் ஈடுபட்டுள்ளார். வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலின்போது பாரதிய ஐனதாவை வீழ்த்துவதற்காக அவர் பல்வேறு வியூகங்கள் வகுத்து வருகிறார். இதன் காரணமாக அவர் தனது சொந்த மாநிலத்திற்கு வரும் பிரதமர் மோடியை வரவேற்க செல்ல மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் கடந்த 6 மாதங்களில் மூன்றாவது முறையாக பிரதமர் மோடியை வரவேற்பதை முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் புறக்கணித்துள்ளார்
இந்த நிலையில் ஐதராபாத் நகரில் பிரதமர் மோடிக்கு எதிராக பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்காவை தெலுங்கானா முதல்-மந்திரி கே.சந்திரசேகர் ராவ், இன்று விமான நிலையத்திற்கு சென்று நேரடியாக வரவேற்க உள்ளார். ஐதராபாத் விமான நிலையத்தில் வந்திறங்கும் யஷ்வந்த் சின்காவுக்கு முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் உட்பட அனைத்து அமைச்சர்களும் சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளனர். அனைத்து அமைச்சர்களும், முதல் மந்திரி உட்பட, யஷ்வந்த் சின்காவை வரவேற்க செல்வதால், ஆளுங்கட்சியான தெலுங்கான ராஷ்திரிய சமிதியை (டிஆர்எஸ்) சேர்ந்த ஒரே ஒரு மந்திரி மட்டுமே இன்று விமான நிலையத்திற்கு சென்று நேரடியாக பிரதமரை வரவேற்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.