5 மாநில இடைத்தேர்தல்: பா.ஜ.க அமோகம், ஆம் ஆத்மிக்கு அதிர்ச்சி


5 மாநில இடைத்தேர்தல்: பா.ஜ.க  அமோகம்,  ஆம் ஆத்மிக்கு அதிர்ச்சி
x
தினத்தந்தி 26 Jun 2022 3:36 PM IST (Updated: 26 Jun 2022 3:42 PM IST)
t-max-icont-min-icon

திரிபுராவில் முதல் மந்திரி மாணிக் சஹா, தாம் போட்டியிட்ட பர்தோவாலி டவுன் தொகுதியில் வென்றார்.

புதுடெல்லி,

5 மாநிலங்கள் மற்றும் டெல்லியில் உள்ள 3 மக்களவை மற்றும் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள அசம்கர் மற்றும் ராம்பூர் மற்றும் பஞ்சாபில் உள்ள சங்ரூர் ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

அதேபோல, டெல்லியில் உள்ள ராஜிந்தர் நகர், ஜார்கண்டில் உள்ள மந்தர், ஆந்திராவின் ஆத்மகூர் மற்றும் அகர்தலாவில் உள்ள டவுன் போர்டோவாலி, திரிபுராவில் உள்ள சுர்மா மற்றும் ஜபராஜ்நகர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

இத்தொகுதிகளில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பஞ்சாப் மாநிலத்தில் சங்ரூர் தொகுதியில் அகாலி தளம் கட்சி (அமிர்தசரஸ்-மான்பிரிவு) வேட்பாளர் சிம்ரஞ்சித் சிங் மான் அமோக வெற்றியைப் பெற்றார். இத்தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் 2-வது இடத்தைதான் பெற முடிந்தது. ஆளும் கட்சியான ஆம் ஆத்மி தோல்வி அடைந்தது அக்கட்சிக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

டெல்லி ராஜேந்தர்நகர் சட்டசபை தொகுதியில் ஆம் ஆத்மி வென்றது. ஆந்திராவில் அத்மகூர் தொகுதியில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வென்றது.

திரிபுராவில் முதல் மந்திரி மாணிக் சஹா, தாம் போட்டியிட்ட பர்தோவாலி டவுன் தொகுதியில் வென்றார். அதேபோல் சுர்மா, ஜூபராஜ்நகர் தொகுதியிலும் பாஜகவே வெற்றி பெற்றது. அகர்தலாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் சுதீப் ரோய் பர்மன் வெற்றி பெற்றார்.

ஜார்க்கண்ட்டின் மந்தார் தொகுதியிலும் காங்கிரஸ் வெற்றியை நோக்கி முன்னிலை வகிக்கிறது. உ.பி.யின் ஆஸம்கர், ராம்பூர் லோக்சபா தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி வெல்லும் என கூறப்பட்ட நிலையில் பாஜக முன்னிலையில் உள்ளது.


Next Story