ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸ் - மத்திய மந்திரிசபை


ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸ் - மத்திய மந்திரிசபை
x

ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியத்தை போனசாக வழங்கியதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

போனஸ்

பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது.

அதில், கடந்த 2021-2022 நிதிஆண்டுக்கு ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கியதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. வழக்கமாக, தசரா விடுமுறைக்கு முன்பு, அரசிதழ் பதிவு பெறாத ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும்.

இந்த ஆண்டும் அதுபோல், தசரா விடுமுறைக்கு முன்பு 11 லட்சத்து 27 ஆயிரம் ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டது.

78 நாள் ஊதியம்

78 நாட்களுக்கான ஊதியம், போனசாக வழங்கப்பட்டது. தகுதியுள்ள ரெயில்வே ஊழியருக்கு அதிகபட்சமாக ரூ.17 ஆயிரத்து 951 கிடைத்தது. போனஸ் வழங்கியதால், மத்திய அரசுக்கு ரூ.1,832 கோடியே 9 லட்சம் செலவானது.

ரெயில்வேயில் பணியாற்றும் தண்டவாள பராமரிப்பாளர்கள், டிரைவர்கள், கார்டுகள், நிலைய அதிகாரிகள், மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், கண்ட்ரோலர்கள், பாயிண்ட்ஸ்மேன், அமைச்சக பணியாளர்கள் மற்றும் இதர குரூப் 'சி' ஊழியர்களுக்கு இந்த போனஸ் வழங்கப்பட்டுள்ளது.

எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.22 ஆயிரம் கோடி மானியம்

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரே தவணையாக ரூ.22 ஆயிரம் கோடி மானியம் வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2022-ம் ஆண்டு ஜூன் மாதம்வரை சர்வதேச விலையை விட குறைந்த விலைக்கு சமையல் கியாசை விற்றதால், இந்திய எண்ணெய் கழகம், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தன.

மேற்கண்ட 2 ஆண்டுகளில், சர்வதேச சந்தையில் சமையல் கியாஸ் விலை 300 சதவீதம் உயர்ந்தது. ஆனால், அந்த விலை உயர்வை முழுமையாக பொதுமக்கள் மீது சுமத்தாமல், 72 சதவீதம் அளவுக்கே இந்தியாவில் சமையல் கியாஸ் விலை உயர்த்தப்பட்டது. இதனால், எண்ணெய் நிறுவனங்கள் கணிசமான நஷ்டத்தை சந்தித்துள்ளன.

கூட்டுறவு சட்ட திருத்தம்

பன்மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தில் கொண்டுவரப்பட உள்ள திருத்தங்களுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. கூட்டுறவு துறையில் வெளிப்படைத்தன்மையை கொண்டுவரவும், தேர்தல் நடைமுறையில் சீர்திருத்தம் செய்யவும் இந்த திருத்தங்கள் கொண்டுவரப்படுகின்றன.

இதற்கான பன்மாநில கூட்டுறவு சங்கங்கள் திருத்த மசோதாவுக்கும் மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. வர்த்தகம் செய்ய எளிதான சூழ்நிலையை உருவாக்கும் நோக்கத்தில் இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள தீனதயாள் துறைமுகத்தை பொது-தனியார் கூட்டு அடிப்படையில் மேம்படுத்த மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

இந்த தகவல்களை மத்திய மந்திரி அனுராக் தாக்குர் நிருபர்களிடம் தெரிவித்தார்.


Next Story