நாளை நடைபெறுகிறது காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்: 4 மாநில அதிகாரிகளுக்கு அழைப்பு


நாளை நடைபெறுகிறது காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்: 4 மாநில அதிகாரிகளுக்கு அழைப்பு
x

கோப்புப்படம்

காவிரியோடு தொடர்புடைய 4 மாநில அதிகாரிகள் அந்தந்த மாநிலங்களில் இருந்து இதில் பங்கேற்கிறார்கள்.

புதுடெல்லி,

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட காவிரி ஒழுங்காற்றுக்குழுவும், காவிரி மேலாண்மை ஆணையமும் அவ்வப்போது கூடி நீர் பங்கீட்டை சுமுகமாக செய்து வருகின்றன.

இதன்படி கடந்த அக்டோபர் மாதம் 30-ந் தேதி காவிரி ஒழுங்காற்றுக்குழு கூடி, தமிழ்நாட்டுக்கு நவம்பர் 23-ந் தேதி வரை வினாடிக்கு 2,600 கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடகத்தை வலியுறுத்தியது. ஆனால் கர்நாடகம் முரண்டு பிடிக்கவே, காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த 3-ந் தேதி அவசரமாக கூடி, ஒழுங்காற்றுக்குழுவின் பரிந்துரையை செயல்படுத்த கர்நாடகத்துக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவின் செல்லுபடிகாலம் நாளை (வியாழக்கிழமை) முடிவடைகிறது.

இதனை முன்னிட்டு அடுத்துவரும் நாட்களுக்கான நீர் திறப்பை உறுதி செய்வது தொடர்பாக காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட இருப்பதாக அதன் தலைவர் வினீத் குப்தா அறிவித்துள்ளார். இதன்படி கூட்டம் நாளை காலை 11.30 மணிக்கு டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக நடைபெறுகிறது. காவிரியோடு தொடர்புடைய தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி மற்றும் கேரள மாநில அதிகாரிகள் அந்தந்த மாநிலங்களில் இருந்து இதில் பங்கேற்கிறார்கள்.


Next Story