டெல்லி, அரியானாவில் 'நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம்; 8 பேர் கைது


டெல்லி, அரியானாவில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்; 8 பேர் கைது
x

Image Courtacy: PTI

டெல்லி, அரியானாவில் ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்ட 8 பேரை சி.பி.ஐ. கைது செய்தது.

புதுடெல்லி,

இளநிலை மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான 'நீட்' தேர்வு கடந்த 17-ந் தேதி நாடு முழுவதும் நடந்தது.

அதில், டெல்லி, அரியானா ஆகிய மாநிலங்களில் ஆள்மாறாட்டம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கவுதம் நகரை சேர்ந்த ஒருவர், இதற்கு மூளையாக செயல்பட்டுள்ளார். அவர் சில ேதர்வர்களுடன் சதி செய்துள்ளார். அவர்களுக்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத வேறு நபர்களை ஏற்பாடு செய்துள்ளார்.

இதை அறிந்து சி.பி.ஐ. அதிகாரிகள், அந்த நபரை கைது செய்தனர். அவர் அளித்த தகவலின்பேரில், டெல்லி, அரியானாவில் பல்வேறு தேர்வு மையங்களில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிக் கொண்டிருந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

மோசடி நடந்தது எப்படி?

இந்த வழக்கில் 11 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. இருப்பினும், 8 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

விசாரணையில், அவர்கள் எப்படி மோசடியில் ஈடுபட்டனர் என்று தெரிய வந்தது. யாருக்காக ஆள்மாறாட்டம் செய்ய வேண்டுமோ, அந்த தேர்வர்களின் பயனர் ஐ.டி.யையும், பாஸ்வேர்டையும் மோசடி நபர்கள் பெற்றுக்கொண்டனர். தங்கள் திட்டப்படி, தங்களுக்கு ஏற்ற தேர்வு மையத்தை பெற அதில் திருத்தங்கள் செய்துள்ளனர்.

தேர்வர்களின் புகைப்படங்களில், ஆள்மாறாட்டம் செய்யும் நபர்களின் புகைப்படத்தை 'மார்பிங்' தொழில்நுட்பத்தில் மாற்றி உள்ளனர். தேர்வர்களின் அடையாள அட்டையை பெற்று, மோசடி அடையாள அட்டைகளை தயாரித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story