லாலு பிரசாத் யாதவ் குடும்பம் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்
லாலு பிரசாத் யாதவ் குடும்பம் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
புதுடெல்லி,
பிகார் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவ், 2004 முதல் 2009 வரையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது மத்திய ரெயில்வே அமைச்சராக பொறுப்பு வகித்தார். அப்போது, ரெயில்வே துறையில் வேலை வழங்க, லாலுவும் அவரது குடும்பத்தினரும் வேலைக்கு விண்ணப்பித்தவர்களிடமிருந்து நிலங்களை மிக குறைந்த விலையில் லஞ்சமாக பெற்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து சிபிஐயும் அமலாக்கத் துறையும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. நிலத்தை லஞ்சமாக பெற்று 4,000-க்கும் மேற்பட்டோருக்கு ரெயில்வே துறையில் வேலை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஊழல் தொடர்பான முக்கியமான ஆவணங்களை சிபிஐ கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், ரெயில்வே வேலை முறைகேடு தொடர்பாக லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரிதேவி, அவரது மகனும் பீகாரின் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட 17 பேருக்கு எதிராக 2-ஆவது குற்றப் பத்திரிக்கையை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ளது. வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.