சிசோடியாவிடம் சி.பி.ஐ. விசாரணை; போராட்டம் நடத்திய ஆம் ஆத்மியின் எம்.பி., எம்.எல்.ஏ. உள்பட 50 பேர் கைது

டெல்லி மதுபான ஊழல் வழக்கில் சிசோடியாவிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மியின் எம்.பி., எம்.எல்.ஏ. உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுடெல்லி,
டெல்லியில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அரசு, மதுபான கொள்கைகளை தளர்த்தி, தனியாருக்கு மதுக்கடை உரிமங்களை வழங்கி, சலுகைகளை அளித்தது. இதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.
இந்த ஊழலில் துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவுக்கும் தொடர்பு உள்ளது என கூறி, அவருக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. கடந்த ஆகஸ்டு மாதம் சோதனை நடத்தியது. கடந்த ஜனவரி மாதம் 14-ந்தேதி அவரது அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் நுழைந்து சோதனை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினர்.
இதனை பழிவாங்கும் நடவடிக்கை என்று கெஜ்ரிவால் சாடினார். இந்த ஊழலில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து 3 மாதங்கள் ஆகிறது. இந்த குற்றப்பத்திரிகையில் மணிஷ் சிசோடியாவின் பெயர் இடம் பெறவில்லை. கைது செய்யப்பட்டுள்ள தொழில் அதிபர் விஜய் நாயக், அபிசேக் போயின்பள்ளி உள்ளிட்டவர்கள் குற்றவாளிகளாக காட்டப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா விசாரணைக்கு சி.பி.ஐ. அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை சம்மன் அனுப்பப்பட்டது. அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கேள்விகள் எழுப்பி பதில்களை பெற்று பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. டெல்லி அரசின் பட்ஜெட் தொடர்பான வேலைகளை முன்னிட்டு, சிசோடியா நேரில் ஆஜராக காலஅவகாசம் கேட்டார்.
இதனை தொடர்ந்து, சிசோடியா சி.பி.ஐ. விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில், மதுபான ஊழல் வழக்கில் டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவை இன்று சி.பி.ஐ. விசாரணைக்கு அழைத்து செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இதனையடுத்து சி.பி.ஐ. தலைமையகத்திற்கு வெளியே ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்த உள்ளனர் என உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையை அடுத்து, டெல்லியில் சி.பி.ஐ. தலைமை அலுவலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மணிஷ் சிசோடியா இன்று காலை தனது இல்லத்தில் இருந்து சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக புறப்பட்டார். திறந்த நிலையிலான காரில் நின்றபடி சென்ற அவரை ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டனர். அவர்கள் கோஷங்களை எழுப்பியபடி அவருக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
இந்த விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங், திரிலோக் புரி எம்.எல்.ஏ. ரோகித் குமார் மெஹ்ராலியா, சங்கம் விஹார் எம்.எல்.ஏ. தினேஷ் மோனியா, கொந்தில் எம்.எல்.ஏ. குல்தீப் சிங், ரோதாஷ் நகர் முன்னாள் எம்.எல்.ஏ. சரிதா சிங் மற்றும் டெல்லி மந்திரி கோபால் ராய் உள்ளிட்டோர் சி.பி.ஐ. தலைமையகம் அமைந்துள்ள சி.ஜி.ஓ. வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த பகுதியில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அத்துமீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக போலீசார் மொத்தம் 50 பேரை கைது செய்தனர். அவர்களில், 42 பேர் ஆண்கள். 8 பேர் பெண்கள் ஆவர் என டெல்லி போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இந்த பகுதியில், கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணிக்கு குவிப்பது உள்பட அனைத்து முன்னேற்பாடுகளும் நேற்று முதல் தயாராக உள்ளன என டெல்லி போலீசார் கூறி உள்ளனர்.