சி.பி.ஐ. விசாரணை முடியும்வரை பஹனாகாவில் எந்த ரெயிலும் நிற்காது
பஹனாகா பஜார் ரெயில் நிலையத்தில் நடந்த 3 ரெயில்கள் மோதிக் கொண்ட விபத்தின் காரணமாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது.
புவனேஷ்வர்,
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தின் பஹானா ரெயில் நிலையம் அருகே ஜூன் 2ம் தேதி, மேற்கு வங்க மாநிலம் ஷாலிமார் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரெயில், சரக்கு ரெ யில் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதே நேரத்தில் அந்த வழியாக வந்த பெங்களூரு யஷ்வந்த்பூர் - ஹவுரா ரயிலும், தண்டவாளத்தில் விழுந்து கிடந்த ரயில் பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. மூன்று ரெயில்கள் மோதிக்கொண்ட இந்த கோர விபத்தில், 288 பேர் உயிரிழந்தனர். 1,200 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தின் பஹனாகா பஜார் ரெயில் நிலையத்தில் நடந்த 3 ரெயில்கள் மோதிக் கொண்ட விபத்தின் காரணமாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விசாரணை முடிந்து உண்மையை கண்டறியும் வரை பஹனாகா பஜார் ரெயில் நிலையத்தில் எந்த ரெயிலும் நிற்காதவாறு சமிக்ஞை கட்டுப்பாடு மூடப்பட்டு விட்டது. பஹனாகா பஜார் ரெயில் நிலையம் போன்ற சிறிய ரெயில் நிலையங்களில் ரிலே இண்டர்லாக்கிங் பேனல்களில் ஒளிரூட்டப்பட்ட சிக்னல் குறியீடுகள், பாயிண்டுகள், ட்ராக் சர்க்யூட்ஸ், க்ராங்க் ஹேண்டில்கள், எல். சி.கேட், சைடிங்க்ஸ் இத்யாதிகள் அவற்றின் புவியியல் நிலைக்கு ஏற்றவாறு இணைக்கப்பட்டுள்ளது. ரெயில் நிலையத்தை சீலிட்டு பதிவுப் புத்தகத்தையும் சி.பி.ஐ. கைப்பற்றி உள்ளதால் இங்கு ரெயில்கள் நிற்காது என தென்கிழக்கு ரெயில்வேயின் தலைமை தகவல் தொடர்பு அதிகாரி ஆதித்ய குமார் சவுத்ரி கூறியுள்ளார்.