புதுச்சேரியில் வரும் கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் முழுமையாக அமல்


புதுச்சேரியில் வரும் கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் முழுமையாக அமல்
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 16 March 2024 4:59 AM GMT (Updated: 16 March 2024 6:17 AM GMT)

புதுச்சேரியில் 2024-25ம் கல்வியாண்டிற்கான அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கை வரும் 25ம் தேதி முதல் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு துவக்கப் பள்ளியிலும் மத்திய இடைநிலை கல்வி வாரிய பாட திட்டம் (சி.பி.எஸ்.இ.) நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2023-24ம் கல்வி ஆண்டு 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் மட்டும் தமிழ்நாடு இடைநிலை கல்வி வாரிய பாடதிட்டம் பின்பற்றப்பட்டது. மற்ற அனைத்து வகுப்புகளும் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பாடதிட்டத்தில் நடந்தது.

வரும் கல்வி ஆண்டு 2024-25 முதல் அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் உள்ள அனைத்து வகுப்புகளும், மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பாடதிட்டம் (சி.பி.எஸ்.இ) நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இதற்கான கல்வியாண்டு நாட்காட்டி, அரசாணை முன்னரே வெளியிடப்பட்டுள்ள நிலையில், வரும் கல்வி ஆண்டு முதல் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் விதிமுறைகளின்படி பள்ளிகள் ஏப்.1 தேதி துவங்கப்பட்டு 2025 மார்ச் 31 வரை நடைபெறும்.

மாணவர்களுக்கு வரும் 24 முதல் 31ம் தேதி வரையிலும், மே 1 முதல் 31 வரை கோடை விடுமுறை விடப்பட்டு, ஜூன் 3ம் தேதி முதல் பள்ளிகள் தொடர்ந்து நடைபெறும். 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கை வரும் 25ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story