மாநில மொழிகளை அழிக்க மத்திய அரசு முயற்சி; முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி குற்றச்சாட்டு


மாநில மொழிகளை அழிக்க மத்திய அரசு முயற்சி; முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி குற்றச்சாட்டு
x

மாநில மொழிகளை அழிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

பெங்களூரு:

பெங்களூருவில் நேற்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

மொழி விவகாரத்தில் நமக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், கன்னட அமைப்புகள், பிற சங்கங்களுடன் சேர்ந்து ஜனதாதளம் (எஸ்) கட்சியும் வீதியில் இறங்கி போராடும். காங்கிரஸ், பா.ஜனதா ஆகிய 2 தேசிய கட்சிகளும், நமது மாநிலத்திற்கு எதிராக தான் உள்ளனர். மத்திய அரசு இந்தி திணப்பை மீண்டும் கையில் எடுத்துள்ளது. மத்திய அரசின் இந்தி மொழி திணப்புக்கு எதிராக தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளார்.

இந்தி மொழி திணப்பு மூலமாக மத்திய அரசு, மாநில மொழிகளை அழிக்க முயற்சிக்கிறது. நாட்டில் இருக்கும் பிரச்சினைகளை முதலில் சரி செய்ய முன்னுரிமை அளிக்க வேண்டும். பா.ஜனதாவினர் மக்களை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். வருகிற 18 மற்றும் 19-ந் தேதிகளில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளேன். அந்த கூட்டத்தில் மாநிலத்தில் வீடுகள் தோறும் கன்னட கொடி ஏற்றும் நிகழ்ச்சியை தொடங்குவது குறித்து ஆலோசிக்க உள்ளேன். முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளியை நான் சந்தித்து பேசவில்லை. தற்போது பஞ்ச ரத்னா யாத்திரைக்காக தயாராகி வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story