டெல்லி அரசின் அதிகாரத்தைப் பறிக்க மத்திய அரசு அவசர சட்டம் - புதிய சர்ச்சை


டெல்லி அரசின் அதிகாரத்தைப் பறிக்க மத்திய அரசு அவசர சட்டம் - புதிய சர்ச்சை
x

கோப்புப்படம்

டெல்லி அரசின் அதிகாரத்தைப் பறிக்க மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் ஐ.,ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற உயர் அதிகாரிகளை நியமிக்கிற, இடமாற்றம் செய்கிற அதிகாரம் யாருக்கு என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் நியமனத்திலும், இடமாற்றத்திலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்குத்தான் அதிகாரம் உண்டு என கடந்த 11-ந் தேதி அதிரடி தீர்ப்பு வழங்கியது.

பொது ஒழுங்கு, போலீஸ், நிலம் ஆகிய 3 துறைகள் தவிர்த்து மற்ற எல்லாவற்றிலும் டெல்லி அரசுக்குத்தான் அதிகாரம் என்று அந்தத் தீர்ப்பு கூறுகிறது.

மத்திய அரசு அவசர சட்டம்

இதனால் மத்திய அரசின் பிரதிநிதியாக திகழ்கிற துணை நிலை கவர்னரின் அதிகாரம் பறிக்கப்படுகிறது. டெல்லி அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு உள்ள சூழலில், இந்தத் தீர்ப்பு, மத்திய அரசுக்கு பின்னடைவாக அமைந்தது.

இந்த நிலையில், இத்தீர்ப்பை செல்லாதது ஆக்குகிற வகையில் மத்திய அரசு அதிகாரிகள் நியமனம், இடமாற்றம் தொடர்பாக தேசிய தலைநகர் சிவில் சர்வீஸ் ஆணையம் அமைப்பதற்கான அவசர சட்டத்தைக் கொண்டு வந்தது.

ஆணையம்

இந்த அவசர சட்டத்தில், "தேசிய தலைநகர் சிவில் சர்வீஸ் ஆணையம், தனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தவும், அதற்கு ஒதுக்கப்பட்ட செயல்பாடுகளை நிறைவேற்றவும் வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஆணையத்தின் தலைவராக முதல்-மந்திரியும், உறுப்பினர் செயலாளராக தலைமைச் செயலாளரும், உள்துறைச் செயலாளரும் இடம் பெற்றிருப்பார்கள். இதன் எல்லா முடிவுகளையும், கூட்டத்தில் ஆஜராகிற பெரும்பான்மை உறுப்பினர்கள் ஓட்டு போட்டு தீர்மானிக்க வேண்டும். இதற்கு உறுப்பினர் செயலாளர் அங்கீகாரம் அளிக்க வேண்டும். அவசரச் சட்டத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆணையத்தால், முதல்-மந்திரி தன் விருப்பப்படி எந்த முடிவும் எடுக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

சர்ச்சை

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு மாறாக இந்த அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்தை மோசடி என்று முதல்-மந்திரி கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி சாடி உள்ளது. இதுபற்றி அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், டெல்லி பொதுப்பணித்துறை மந்திரியுமான ஆதிஷி கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன அமர்வின் ஒருமித்த தீர்ப்புக்கு எதிராக மோடி அரசு செயல்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தன் விருப்பப்படியும், ஜனநாயக கொள்கைகள்படியும் சுதந்திரமாக முடிவுகள் எடுக்க அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியது. ஆனால் மத்திய அரசின் இந்த அவசரச் சட்டம், மோடி அரசு தோல்வி அடைந்து வருவதையே காட்டுகிறது. கெஜ்ரிவால் அரசிடம் இருந்து அதிகாரத்தை பறிப்பதுதான், மத்திய அரசு இந்த அவசரச் சட்டத்தை கொண்டு வந்ததின் ஒரே நோக்கம் ஆகும். இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. சுப்ரீம் கோர்ட்டு கோடை விடுமுறை விட்டுள்ள தருணத்தில் வேண்டுமென்றே இந்த அவசர சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று அவர் கூறினார்.

காங்கிரஸ், பா.ஜ.க. கருத்து

அவசர சட்டம் கொண்டு வந்துள்ள மத்திய அரசின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

அந்தக் கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "இந்த புதிய அவசர சட்டம் தீவிரமாக ஆய்வு செய்யப்பட வேண்டும். ஆனால் இது ஒரு மோசமான செயல் என்பது தெளிவு" என கூறி உள்ளார்.

இந்த அவசர சட்டத்தை பா.ஜ.க. வரவேற்றுள்ளது. அந்தக் கட்சியின் டெல்லி தலைவர் வீரேந்திர சச்தேவா கருத்து தெரிவிக்கையில், " டெல்லியின் கண்ணியத்தைக் காக்கவும், மக்களின் நலன்களை பாதுகாக்கவும் இந்த அவசர சட்டம் தேவையானது. டெல்லி தேசிய தலைநகர். இங்கு என்ன நடந்தாலும், அது நாடெங்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்" என கூறினார்.

கபில் சிபல் கருத்து

முன்னாள் மத்திய மந்திரியும், மாநிலங்களவை எம்.பி.யுமான கபில் சிபல், "அதிகாரிகள் நியமன, இட மாற்ற அதிகாரத்தை டெல்லி அரசிடம் ஒப்படையுங்கள் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டிடம் மத்திய அரசு, நீங்கள் தடையாக வந்தால் நாங்கள்தான் இறுதி முடிவை எடுப்போம். அதற்குத்தான் இந்த அவசர சட்டம் கொண்டு வந்திருக்கிறோம் என்று கூறுவதாக இந்த அவசர சட்டம் அமைந்துள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.


Next Story