சிக்கிம் வெள்ளத்தால் ஆங்காங்கே சிக்கிக்கொண்ட சுற்றுலா பயணிகளை மீட்கும் பணியில் விமானப்படை தீவிரம்


சிக்கிம் வெள்ளத்தால் ஆங்காங்கே சிக்கிக்கொண்ட சுற்றுலா பயணிகளை மீட்கும் பணியில் விமானப்படை தீவிரம்
x

சிக்கிம் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்திருக்கும் நிலையில், அங்கு பல இடங்களில் சிக்கியிருக்கும் சுற்றுலா பயணிகளை மீட்கும் பணிகளை விமானப்படை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

மேகவெடிப்பால் பெருமழை

சிக்கிமின் லாச்சன் பள்ளத்தாக்கில் சமீபத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டு பெருமழை கொட்டியது. இதனால் அங்குள்ள டீஸ்டா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அத்துடன் அங்குள்ள சங்தாங் அணையும் உடைந்தது. இதனால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் பல மாவட்டங்கள் நீரில் மூழ்கின. இதில் நூற்றுக்கணக்கானோர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். பர்டாங் பகுதியில் முகாமிட்டிருந்த 22 ராணுவ வீரர்களும் வெள்ளத்தில் சிக்கி மாயமாகினர்.

பலி எண்ணிக்கை அதிகரிப்பு

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த பேரிடரில் சிக்கி மாயமானவர்களை தேடும் பணியில் ராணுவம், இந்தோ-திபெத் பாதுகாப்பு படையினர் உள்பட பல்வேறு துறையினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.இதனால் ஏராளமானோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் சுமார் 100 பேர் வரை மாயமாகி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.அதேநேரம் இந்த வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்து இருக்கிறது. இதில் ராணுவ வீரர்கள் பலரும் அடங்கி இருப்பதாக பாகாப்புத்துறை அறிவித்து உள்ளது.

ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு

இந்த நிலையில் சிக்கிம் வெள்ளப்பெருக்கை தொடர்ந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் மாநிலத்தின் பல பகுதிகளில் சிக்கித்தவித்து வருகின்றனர். அவர்களை மீட்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இதில் ராணுவம் மற்றும் விமானப்படை வீரர்கள் இறங்கி உள்ளனர். மலைப்பாங்கான பகுதிகளில் சிக்கி இருக்கும் சுற்றுலா பயணிகள் விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில லாச்சன் பகுதியில் சிக்கியிருந்த 77 சுற்றுலா பயணிகள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு பாக்யோங் விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் 7 பேர் குழந்தைகள் ஆவர்.

இதைப்போல வெள்ளம் பாதித்த பகுதிகளில மனிதாபிமான நடவடிக்கைகள் மற்றும் பேரிடர் நிவாரண பணிகளிலும் விமானப்படை இறங்கி உள்ளது. மேலும் அவசர மற்றும் அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி வருகிறது.

முதல்-மந்திரி ஆலோசனை

இதற்கிடையே பேரிடர் தாக்கிய பகுதிகளில் நடைபெறும் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்பாக முதல்-மந்திரி பிறேம் சிங் தமாங் நேற்று ஆலோசனை நடத்தினார். தலைமை செயலாளர் பதக், ராணுவ தளபதி மனோஜ் பாண்டே உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதைப்போல பல்வேறு அமைச்சக அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் தனியாக ஆலோசனை நடத்தி மீட்பு, நிவாரண பணிகளை முடுக்கி விட்டார்.

சிக்கிம் வெள்ளத்தில் 3,432 வீடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால் பாதிக்கப்பட்டு உள்ள 6,505 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85,870 என அரசு தெரிவித்து உள்ளது.


Next Story