குற்றவியல் சட்டங்களில் திருத்தம்: செயல்முறைகளை தொடங்கியதாக மத்திய அரசு தகவல்


குற்றவியல் சட்டங்களில் திருத்தம்: செயல்முறைகளை தொடங்கியதாக மத்திய அரசு தகவல்
x

குற்றவியல் சட்டங்களில் திருத்தம் தொடர்பான செயல்முறைகளை தொடங்கியதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

நாட்டின் குற்றவியல் நீதிமுறையை விரிவாக ஆய்வு செய்வது அவசியம் என மத்திய உள்துறையின் நாடாளுமன்ற நிலைக்குழு அதன் 146-வது அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது. இதே போன்ற பரிந்துரைகளை 111 மற்றும் 128-வது அறிக்கைகளும் அளித்துள்ளன.

இவற்றை கருத்தில் கொண்டு மக்களை மையப்படுத்திய சட்டக்கட்டமைப்பை உருவாக்கவும், அனைவருக்கும் நியாயமான, விரைவான நீதி கிடைக்கச்செய்வதற்கும் நாட்டின் குற்றவியல் சட்டங்களில் ஒருங்கிணைந்த மாற்றங்களை செய்யவேண்டியுள்ளது. இதன் அடிப்படையில், பங்குதாரர்கள் அனைவருடனும் கலந்தாலோசித்து இந்திய தண்டனைச்சட்டம்-1860, குற்றவியல் நடைமுறைச்சட்டம்-1973, இந்திய சாட்சிய சட்டம்-1872 போன்ற குற்றவியல் சட்டங்களில் ஒருங்கிணைந்த திருத்தங்களை கொண்டுவரும் நடைமுறையை அரசு தொடங்கியுள்ளது.

குற்றவியல் சட்டங்களில் சீர்திருத்தங்கள் பற்றி ஆலோசனை கூறுவதற்கு டெல்லியில் உள்ள தேசிய சட்டப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களின் கவர்னர்கள், முதல்-மந்திரிகள், நிர்வாக அதிகாரிகள், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி, பல்வேறு ஐகோர்ட்டுகளின் தலைமை நீதிபதிகள், இந்திய பார்கவுன்சில், மாநிலங்களின் பார்கவுன்சில், சட்ட பல்கலைக்கழகங்கள், நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்கள் ஆகியோரிடம் இந்த திருத்தங்கள் தொடர்பாக ஆலோசனைகளை உள்துறை அமைச்சகம் கோரியுள்ளது.

இந்தத்தகவல்களை மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் குமார் மிஸ்ரா நாடாளுமன்ற மக்களவையில் நேற்று எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.


Next Story