'கொரோனா இன்னும் முடியவில்லை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்


கொரோனா இன்னும் முடியவில்லை எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
x

கோப்புப்படம்

கொரோனா இன்னும் முடியவில்லை என்றும் எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் மாநிலங்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா பரவல் மெல்ல, மெல்ல அதிகரித்து வருகிறது. மராட்டியம், கேரளா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்கள் தொற்று பரவல் வேகமெடுத்துள்ளது. அந்த வகையில் கடந்த இரு தினங்களாக தினசரி பாதிப்பு 8 ஆயிரத்துக்கும் அதிகமாக பதிவாகி உள்ளது.

இந்த நிலையில் கொரோனா தொற்று நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை மந்திரிகள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் கொரோனா தொற்று இன்னும் முடியவில்லை என்றும், தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கடைபிடித்து, எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும் கொரோனாவின் புதிய மாறுபாடுகளை அடையாளம் காண, கண்காணிப்பைத் தொடரவும், பலப்படுத்தவும், மரபணு வரிசைமுறையில் கவனம் செலுத்தவும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

12-17 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தும்படி வலியுறுத்திய மன்சுக் மாண்டவியா இதன் மூலம் அவர்கள் தடுப்பூசியின் பாதுகாப்போடு பள்ளிகளில் சேர முடியும் என கூறினார்.

அதேபோல் 60 வயதுக்கு மேற்பட்ட மக்கள் குழு எளிதில் பாதிக்கப்படக்கூடிய பிரிவாக இருப்பதால் அவர்கள் முன்னெச்சரிக்கையுடன் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக நமது சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக செல்கிறார்கள் என அவர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் போதுமான தடுப்பூசிகள் இருப்பதாக கூறிய அவர் தடுப்பூசிகள் வீணாகாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை கடுமையாக அறிவுறுத்தினார்.

மேற்கூறிய தகவல்கள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Next Story