இலவச ரேஷன் அரிசி திட்டம்: அடுத்த 5 ஆண்டுக்கு நீட்டிப்பு - பிரதமர் மோடி அறிவிப்பு


இலவச ரேஷன் அரிசி திட்டம்: அடுத்த 5 ஆண்டுக்கு நீட்டிப்பு - பிரதமர் மோடி அறிவிப்பு
x

சுய மரியாதை மற்றும் நம்பிக்கையுடன் கூடிய ஏழை மக்களை காங்கிரஸ் வெறுக்கிறது.

ராய்ப்பூர்,

சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள சத்தீஸ்கார் மாநிலத்தில் பிரதமர் மோடி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில், அங்கு நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி பேசியதாவது:

சுய மரியாதை மற்றும் நம்பிக்கையுடன் கூடிய ஏழை மக்களை காங்கிரஸ் வெறுக்கிறது. ஏழைகள் எப்போதும் தங்கள் முன் கையேந்த வேண்டும் எனவும், ஏழைகள் எப்போதும் ஏழைகளாகவே இருக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் விரும்புகிறது. அதனால் மத்திய அரசு ஏழைகளுக்காக தொடங்கும் திட்டங்களை இங்குள்ள காங்கிரஸ் அரசு, தடுக்கிறது.

கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியின் அநீதி மற்றும் ஊழலை பொறுத்துக் கொண்டீர்கள். இன்னும் 30 நாட்கள்தான் உள்ளது. அதன்பின் இந்த பிரச்சினையிலிருந்து நீங்கள் விடுபடுவீர்கள். இலவச ரேஷன் திட்டத்தை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் நாட்டில் உள்ள 80 கோடி மக்கள் பயனடைவர்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏழைகளின் பசியை போக்குவதற்காக பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்னயோஜனா என்ற திட்டத்தை கடந்த 2020-ம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

இந்த திட்டத்தின் கீழ் நபர் ஒன்றுக்கு 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்பட்டது. உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷனுடன் கூடுதலாக இந்த உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்த திட்டம் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்த திட்டம் அடுத்த மாதத்துடன் நிறைவடைய இருந்தது. இதை மேலும் நீட்டித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

இலவச ரேஷன் திட்டத்தை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கும் முடிவு சமீபத்திய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இது ஏழை மக்களுக்கான புத்தாண்டு பரிசு என கூறப்படுகிறது.


Next Story