ரூ. 10 பாக்கியால் ஏற்பட்ட பிரச்சினை - தெருவோர உணவக உரிமையாளரை அடித்துக்கொன்ற வாடிக்கையாளர்
10 ரூபாய்க்காக ஏற்பட்ட பிரச்சினையால் தெருவோர உணவக உரிமையாளரை வாடிக்கையாளர் அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் சோன்பாரா மாவட்டம் டொரியா கிராமத்தை சேர்ந்த அவினாஷ் குப்தா (16) தனது கிராமத்தில் தெருவோர சிற்றுண்டி உணவகம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இந்த சிற்றுண்டி உணவகத்திற்கு நேற்று வந்த அதேகிராமத்தை சேர்ந்த தினேஷ் 10 ரூபாய்க்கு சாட் மசாலா என்ற உணவை சாப்பிட்டுள்ளார். மேலும், இதற்கான பணம் 10 ரூபாயை பிறகு தருவதாக கடை உரிமையாளர் அவினாஷிடம் தினேஷ் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து, சிறிது நேரம் கழித்து தினேஷ் மற்றொரு நண்பருடன் அவினாஷ் நடத்தி வரும் சிற்றுண்டி உணவகத்திற்கு வந்துள்ளார். தனது நண்பருக்கு சாட் மசாலா சிற்றுண்டி வழங்குமாறு கடை உரிமையாளரிடம் தினேஷ் கேட்டுள்ளார்.
ஆனால், ஏற்கனவே ரூ. 10 பாக்கி இருப்பதால் முதலில் அந்த பணத்தை தரும்படி தினேஷிடம் கடை உரிமையாளர் அவினாஷ் கூறியுள்ளார். இதனால், கடை உரிமையாளருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், கடை உரிமையாளர் அவினாஷை வாடிக்கையாளர் தினேஷ் இரும்பு கம்பியால் தாக்கினார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அவினாஷ் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தினேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.