மடாதிபதி கைதானால் பெரிய பிரபலங்கள் சிக்குவார்கள்;சைத்ரா வெளியிட்ட தகவலால் பரபரப்பு


எம்.எல்.ஏ. ‘சீட்’ வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் மடாதிபதி கைதானால் பெரிய பிரபலங்கள் சிக்குவார்கள் என்று இந்து அமைப்பின் பெண் பிரமுகர் பரபரப்பு தகவல்களை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

எம்.எல்.ஏ. 'சீட்' வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் மடாதிபதி கைதானால் பெரிய பிரபலங்கள் சிக்குவார்கள் என்று இந்து அமைப்பின் பெண் பிரமுகர் பரபரப்பு தகவல்களை தெரிவித்துள்ளார்.

ரூ.5 கோடி மோசடி

உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவை சேர்ந்தவர் கோவிந்தபாபு பூஜாரி. தொழில்அதிபர். இவர், சட்டசபை தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட முயன்றார். அவருக்கு பைந்தூர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட சீட் வாங்கி கொடுப்பதாக கூறி ரூ.5 கோடி வாங்கி மோசடி செய்யப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக பெங்களூரு பண்டேபாளையாவில் பதிவான வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டு இருந்தது. இதையடுத்து, கோவிந்தபாபுவிடம் ரூ.5 கோடி வாங்கி மோசடி செய்ததாக இந்து அமைப்பின் பெண் பிரமுகர் சைத்ரா குந்தாப்புரா, பா.ஜனதா பிரமுகர் ககன் கடூரு, ரமேஷ், தன்ராஜ், பிரஜ்வல், ஸ்ரீகாந்த் ஆகிய 6 பேரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்கள் 6 பேரையும் வருகிற 23-ந் தேதி வரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதிய கார்கள் வாங்கினர்

கோவிந்தபாபுவிடம் ரூ.5 கோடி மோசடி செய்ததில் சைத்ரா மற்றும் ககன் கடூரு மூளையாக செயல்பட்டு இருந்தனர். கைதான மற்றவர்களை ஆர்.எஸ்.எஸ். தலைவர், பா.ஜனதா தேசிய தேர்தல் பணிக்குழு உறுப்பினர் என்று கோவிந்தபாபுவிடம் கூறி இந்த மோசடியில் சைத்ரா, ககன் கடூரு ஈடுபட்டது தெரியவந்தது. கைதான 6 பேரிடமும் நேற்று முன்தினம் நடத்திய விசாரணையில் சில தகவல்கள் போலீசாருக்கு கிடைத்திருந்தது.

அதில், கோவிந்தபாபுவிடம் மோசடி செய்த பணத்தில் சைத்ரா மற்றும் ககன் கடூரு சொகுசு கார்களை வாங்கி இருந்ததும், ககன் கடூரு தனது திருமணத்தை பிரமாண்டமாக நடத்தியதும், ஆர்.எஸ்.எஸ்.மற்றும் பா.ஜனதா தலைவர்கள் போல் நடிப்பதற்காக ஒவ்வொருவருக்கும் ரூ.1¼ லட்சம் வரை கொடுத்ததும் தெரியவந்தது. நேற்று முன்தினம் இரவு விசாரணை முடிந்ததும் சைத்ராவை பெங்களூருவில் உள்ள பெண்கள் பாதுகாப்பு மையத்திற்கு அழைத்து சென்று தங்க வைத்திருந்தார்கள்.

பிரபலங்கள் சிக்குவார்கள்

நேற்று காலையில் அவரிடம் மீண்டும் விசாரணை நடத்துவதற்காக சாம்ராஜ்பேட்டையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு ஜீப்பில் அழைத்து வரப்பட்டார். அப்போது அங்கு பத்திரிகையாளர்கள் திரண்டு இருந்தார்கள். பத்திரிகையாளர்களை பார்த்ததும் திடீரென்று சைத்ரா பேட்டி அளிக்க முன்வந்தார். இதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.

பின்னர் சைத்ரா பேசுகையில், இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் காலு மடத்தின் மடாதிபதி கைதானால் பெரிய, பெரிய பிரபலங்கள் சிக்குவார்கள். இந்திரா உணவகத்தில் பாக்கி பணம் வழங்கப்படாமல் உள்ளது. அதன் காரணமாக என்னை சிக்க வைக்க சதி நடக்கிறது, என்று கூறினார். அதற்குள் சைத்ராவை போலீசார், அலுவலகத்தின் உள்ளே அழைத்து சென்றுவிட்டனர்.


Next Story