தீவிரமடையும் 'பிப்பர்ஜாய்' புயல்: கர்நாடகத்தில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
அரபிக்கடலில் உருவாகி உள்ள 'பிப்பர்ஜாய்' புயல் தீவிரமடைந்துள்ளதால் கர்நாடகத்தில் அடுத்த 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், கடலோர மாவட்டங்களுக்கு 'மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெங்களூரு:
'பிப்பர்ஜாய்' புயல்
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் நிலவி வருகிறது. மாநிலத்தில் கடும் வெயில் சுட்டெரித்து வந்தாலும் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி பின்னர் புயலாகவும் வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு 'பிப்பர்ஜாய்' என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் தீவிர புயலாக மாறக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள புயல் காரணமாக கர்நாடகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடலோர மாவட்டமான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா பகுதிகளுக்கு 'மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இங்கு 6 சென்டிமீட்டர் முதல் 12 சென்டி மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு ைமயம் தெரிவித்துள்ளது.
மேலும் அரபிக்கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெங்களூரு, சித்ரதுர்கா, கோலார், துமகூரு உள்ளிட்ட தென்கர்நாடகத்தின் உள்மாவட்டங்களில் கனமழையும், வடகர்நாடகத்தின் பெலகாவி, பீதர், கதக், கலபுரகி, கொப்பல், விஜயாப்புரா, யாதகிரி ஆகிய பகுதிகளில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.