6 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' கர்நாடகத்தில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு


6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கர்நாடகத்தில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு
x

கர்நாடகத்தில் 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம், மாநிலத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மிக கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

பெங்களூரு:

தென்மேற்கு பருவமழை

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கியது. கடந்த ஜூலை மாதம் கனமழை கொட்டியதால் நீர் நிலைகள், அணைகள், ஏரி, குளங்கள் அனைத்தும் நிரம்பின. காவிரியில் ஒரு லட்சம் கனஅடிக்கும் மேல் நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் மேட்டூர் அணை நிரம்பியது. இந்த மழை படிப்படியாக குறைந்து வறண்ட வானிலை நிலவியது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.

பெங்களூரு, மைசூரு, சிவமொக்கா, ஹாசன், குடகு, துமகூரு, ராமநகர், மண்டியா, கோலார் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உத்தர கன்னடா, உடுப்பி மாவட்டங்களில் மிக தீவிரமாக மழை கொட்டி வருகிறது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

400 ஏக்கர் பாக்கு தோட்டம்

கே.ஆர்.எஸ்., கபினி உள்ளிட்ட அணைகள் நிரம்பி உபரி நீர் அதிகளவில் வெளியேற்றப்பட்டு வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. துமகூருவில் கனமழை பெய்து சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் உள்ள பாக்கு தோட்டத்தில் வெள்ளம் முழங்கால் அளவுக்கு தேங்கி நிற்கிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தலைநகர் பெங்களூருவை பொறுத்தவரையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் சர்ஜாப்புராவில் உள்ள ரெயின்போ லே-அவுட்டை வெள்ளம் சூழ்ந்தது. அங்கு தெருக்களில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளது. அதனால் அங்குள்ள மக்கள் டிராக்டர் மூலம் வீட்டை விட்டு வெளியே வந்து தேவையான உணவு பொருட்களை வாங்கி செல்கிறார்கள்.

'ரெட் அலர்ட்'

பள்ளி-கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோரும் டிராக்டர் மூலமே லே-அவுட்டை விட்டு வெளியே வருகிறார்கள். அங்கு மின் மோட்டார்கள் மூலம் நீர் வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் கர்நாடகத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தட்சிண கன்னடா, உத்தரகன்னடா, உடுப்பி, குடகு, சிக்கமகளூரு, சிவமொக்கா ஆகிய 6 மாவட்டங்களுக்கு மிக அதிக கனமழை பெய்யும் என்பதை குறிக்கும் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாம்ராஜ்நகர், தாவணகெரே, மைசூரு, பெலகாவி, ராய்ச்சூர், விஜயாப்புரா ஆகிய 6 மாவட்டங்களுக்கு 'மஞ்சள் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

கடும் குளிர்

தலைநகர் பெங்களூருவை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டமாக காணப்படும். சில நேரங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெங்களூருவில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் நகரில் குளிர் காற்று வீசுகிறது. குளிர் காலத்தில் இருப்பது போன்ற வானிலை தற்போது நிலவுகிறது. கடும் குளிரால் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், குடகு, தட்சிண கன்னடா, உடுப்பி, சிக்கமகளூரு ஆகிய பகுதிகளிலும் இடைவிடாமல் பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் அந்தப்பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

திப்பகொண்டனஹள்ளி, எசரகட்டா அணைகளில் நீர் தேக்கம்

பெங்களூருவுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கிய திப்பகொண்டனஹள்ளி, எசரகட்டா அணைகள் ஆகஸ்டு மாதத்தில் கடந்த 10 ஆண்டுகளில் தற்போது பெய்து வரும் மழையால் நிரம்பியுள்ளன. திப்பகொண்டஹள்ளி அணையின் மொத்த கொள்ளளவு 69 அடி உயரம் ஆகும். அதில் தற்போது 47 அடி உயரத்திற்கு நீர் தேங்கியுள்ளது. அதேபோல் எசரகட்டா அணையிலும் ஆகஸ்டு மாதத்தில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நீர் தேங்கியுள்ளது. அந்த 50 அடி உயர கொள்ளளவு கொண்ட அந்த அணையில் தற்போது 20 அடி அளவுக்கு நீர் தேங்கியுள்ளது. அந்த அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து நன்றாக இருப்பதால் அடுத்த சில நாட்களில் அந்த அணைகள் நிரம்ப வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முட்டஹள்ளி கிராமத்தில் மீண்டும் நிலச்சரிவு

உத்தரகன்னடா மாவட்டம் பட்கல் தாலுகாவில் பெய்து வரும் கனமழையால் கடந்த சில தினங்களுக்கு முன்பு பட்கல் அருகே உள்ள முட்டஹள்ளி என்ற கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. மண்சரிந்து வீடு மீது விழுந்ததில் 4 பேர் உயிரிழந்து இருந்தனர். இந்த நிலையில் இன்று மீண்டும் முட்டஹள்ளி கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து அந்த கிராமத்தில் வசித்து வந்த 50 குடும்பத்தினரை அதிகாரிகள் அங்கிருந்து அப்புறப்படுத்தி உள்ளனர். மேலும் மணலை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி நடந்து வருகிறது.

தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட தந்தை, மகன் மீட்பு

துமகூரு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் துமகூரு அருகே திப்பூர் என்ற கிராமத்தில் உள்ள அமானிகெரே ஏரி நிரம்பி இருந்தது. இந்த நிலையில் நேற்று அந்த ஏரி உடைந்து தண்ணீர் வெளியேறியது. இதனால் திப்பூர் கிராமத்திற்குள் தண்ணீர் புகுந்தது. சாலைகள், தெருக்களை தண்ணீர் சூழ்ந்து கொண்டது. அந்த தண்ணீரில் இருந்த மீன்களை மக்கள் போட்டி போட்டு பிடித்து சென்றனர். இதுபோல துமகூரு அருகே உள்ள ஒரு தடுப்பணை மழைக்கு நிரம்பியது. அந்த தடுப்பணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை மக்கள் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று தடுப்பணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் பகுதியில் ஒரு சிறுவனும், அவனது தந்தையும் நின்றனர். அப்போது சிறுவனை தண்ணீர் அடித்து சென்றது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தந்தை, சிறுவனை காப்பாற்ற முயன்றார். அவரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். ஆனால் அவர்களை அப்பகுதி மக்கள் காப்பாற்றினர்.


Next Story