சண்டிகர் மேயர் தேர்தல்: ஜனநாயக கேலிக்கூத்து; மாநகராட்சி கூட்டத்திற்கு தடை - சுப்ரீம் கோர்ட் அதிரடி


சண்டிகர் மேயர் தேர்தல்: ஜனநாயக கேலிக்கூத்து; மாநகராட்சி கூட்டத்திற்கு தடை - சுப்ரீம் கோர்ட் அதிரடி
x
தினத்தந்தி 5 Feb 2024 11:44 AM GMT (Updated: 5 Feb 2024 12:19 PM GMT)

சண்டிகர் மேயர் தேர்தல் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் சம்பவம் என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தல் கடந்த 30-ம் தேதி நடைபெற்றது. மேயர் தேர்தலில் மொத்தம் 36 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். இந்த தேர்தலில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணி வேட்பாளர் குல்தீப் குமார் 20 வாக்குகள் பெற்றார். பா.ஜ.க. வேட்பாளர் மனோஜ் சோன்கர் 16 வாக்குகள் பெற்றார். ஆனால், குல்தீப் குமார் பெற்ற 20 வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாது என தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார்.

இதன் மூலம் 16 வாக்குகள் பெற்ற மனோஜ் சோன்கர் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார். வாக்கு எண்ணிக்கையின்போது தேர்தல் நடத்தும் அதிகாரி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி வீடியோ வெளியிட்டன. மேலும், தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறி பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

ஆனால் சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு இடைக்கால தடை விதிக்க ஐகோர்ட்டு மறுத்துவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஆம் ஆத்மி கவுன்சிலர் குல்தீப் குமார் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் இந்த மனுவை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்தது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் சம்பவம். ஜனநாயகத்தை படுகொலை செய்யும் செயலாகத்தான் இதனை பார்க்கிறேன் என்று கூறி கடுமையாக சாடினார்.

செல்லாத ஓட்டாக இருந்தாலும் அதில் எந்த ஒரு திருத்தங்களையும் தேர்தல் அதிகாரி மேற்கொள்ளக் கூடாது. தேர்தல் நடத்தும் அதிகாரி சண்டிகர் தேர்தலில் வாக்குச் சீட்டுகளை சிதைத்துள்ளார் என்று கூறினார். மேலும், சண்டிகர் மேயர், மாநகராட்சி கூட்டத்தை கூட்ட தடைவிதித்து அவர் உத்தரவிட்டுள்ளார்.


Next Story