அவுரங்காபாத், ஒஸ்மானாபாத் ஆகிய நகரங்களின் பெயர்கள் மாற்றம் - மராட்டிய மாநில அரசு அறிவிப்பு


அவுரங்காபாத், ஒஸ்மானாபாத் ஆகிய நகரங்களின் பெயர்கள் மாற்றம் - மராட்டிய மாநில அரசு அறிவிப்பு
x

அவுரங்காபாத், உஸ்மானாபாத் ஆகிய பெயர்களை முறையே சத்ரபதி சம்பாஜி நகர், தாராஷிவ் என மாற்றுவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் மற்றும் ஒஸ்மானாபாத் ஆகிய நகரங்களின் பெயர்களை மாற்ற முந்தைய மகா விகாஸ் அதாடி அரசு முடிவு செய்தது. கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் 29-ந்தேதி அப்போதைய மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்பாக, அவரது தலைமையில் நடந்த கடைசி அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து உத்தவ் தாக்கரேவின் ராஜினாமாவுக்கு பின்னர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா- பா.ஜ.க. அரசு பதவியேற்றது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் அவுரங்காபாத் மற்றும் ஒஸ்மானாபாத்தின் பெயர்களை முறையே சத்ரபதி சம்பாஜிநகர், தாராஷிவ் என மாற்ற ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசின் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து அவுரங்காபாத், ஒஸ்மானாபாத் ஆகிய நகரங்களின் பெயர்களை மாற்றுவது தொடர்பான அறிவிப்பை மராட்டிய மாநில அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து மாநில வருவாய்த்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "சில மாதங்களாக கேட்கப்பட்ட ஆலேசானைகள், பரிசீலனைகளின்படி, துணைக் கோட்டங்கள், கிராமங்கள், தாலுகாக்கள் மற்றும் மாவட்டங்களின் பெயர்களை மாற்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story