செஸ் ஒலிம்பியாட் போட்டி: பிரதமர் மோடிக்கு நேரில் அழைப்பு


செஸ் ஒலிம்பியாட் போட்டி: பிரதமர் மோடிக்கு நேரில் அழைப்பு
x

ஜூலை 19ஆம் தேதி ல் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா அழைப்பிதழ் வழங்கப்பட உள்ளது

சென்னை,

மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச"செஸ் ஒலிம்பியாட்" போட்டி வருகிற 28-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக பூஞ்சேரியில் உள்ள "போர் பாயிண்ட்ஸ்" அரங்கத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இதில் 188 நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்கள், வீராங்கனைகள் உள்ளிட்ட 2,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். போட்டியில் பங்கேற்க வருபவர்களுக்கு வரவேற்பு, விருந்தோம்பல், கலைநிகழ்ச்சி, தங்கும்வசதி, உணவு, உபசரித்தல், போக்குவரத்து, பாதுகாப்பு, நிறைவுவிழா உள்ளிட்டவைகளை கவனிக்க தமிழக அரசு சார்பில் 18 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தீவிரமாக கண்காணித்து போட்டிக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நிகழ்ச்சியை கோலாகலமாக நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறார். சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் தொடக்க விழா நடைபெறுகிறது. விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

பிரதமருக்கு அழைப்பு விடுப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் டெல்லி செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால், அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் டெல்லி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதனிடையே, பிரதமர் மோடி நேற்று தொலைபேசி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். அப்போது, செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்க வரும்படி பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் அழைப்பு விடுத்தார். மருத்துவ சிகிச்சை பெற்று வருவதால் நேரில் வந்து அழைக்க முடியவில்லை என்று முதல்-அமைச்சர் தெரிவித்ததாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் ஜூலை 19ஆம் தேதி பிரதமர் மோடியை நேரில் சந்தித்து செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா அழைப்பிதழ் வழங்கப்பட உள்ளது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, அமைச்சர் மெய்யநாதன், தலைமை செயலர் இறையன்பு ஆகியோர் அழைப்பிதழை வழங்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story