சத்தீஷ்கார் முதல்-மந்திரியாக பதவியேற்றார் விஷ்ணு தியோ சாய்...!
ராய்ப்பூரில் உள்ள அறிவியல் கல்லூரி மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது.
ராய்ப்பூர்,
சத்தீஷ்கார் மாநிலத்தில் கடந்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 54 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையுடன் பாஜக அபார வெற்றிபெற்றது. காங்கிரஸ் 35 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.
தேர்தலில் வேற்றி பெற்றதையடுத்து முதல்-மந்திரியை தேர்வு செய்யும் நடவடிக்கையை பாஜக தொடங்கியது. அதன்படி, ராய்ப்பூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாஜக எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் மாநில முதல்-மந்திரியாக விஷ்ணு தியோ சாய் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக பாஜக தலைமை அறிவித்தது.
பழங்குடி மக்கள் அதிகம் உள்ள மாநிலத்தில், பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவர் முதல்-மந்திரியாக இருக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் கருத்துப்படி விஷ்ணு தியோ முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், சத்தீஷ்கார் முதல்-மந்திரியாக விஷ்ணு தியோ சாய் இன்று பதவியேற்றார். ராய்ப்பூரில் உள்ள அறிவியல் கல்லூரி மைதானத்தில் இன்று கோலாகலமாக நடைபெற்ற பதவியேற்பு விழாவில் விஷ்ணு தியோ சாய் மாநிலத்தின் முதல்-மந்திரியாக பதவியேற்றார்.
சத்தீஷ்கார் மாநில கவர்னர் அரிசந்தன், முதல்-மந்திரி விஷ்ணு தியோ சாய்க்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை மந்திரி அமித் ஷா மற்றும் பாஜக ஆளும் பிற மாநிலங்களின் முதல்-மந்திரிகள், மத்திய மந்திரிகள், பாஜக மூத்த தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.