சத்தீஸ்கார் தேர்தல்: முதற்கட்டமாக 20 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு


சத்தீஸ்கார் தேர்தல்: முதற்கட்டமாக 20 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
x

Image Courtacy: PTI

தினத்தந்தி 5 Nov 2023 8:59 PM GMT (Updated: 6 Nov 2023 4:37 AM GMT)

மாநிலத்தின் மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு வருகிற 17-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது

ராய்ப்பூர்,

காங்கிரஸ் ஆளும் சத்தீஷ்காரிலும் முதற்கட்ட தேர்தல் நாளை நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள 90 தொகுதிகளில் முதற்கட்டமாக 20 இடங்களில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

7 மாவட்டங்களுக்கு உட்பட்ட இந்த தொகுதிகள் பெரும்பாலும் நக்சலைட்டு ஆதிக்கம் நிறைந்த பகுதிகள் ஆகும். இதில் ஆளும் காங்கிரஸ், பா.ஜனதா, இடதுசாரிகள், ஆம் ஆத்மி, சுயேச்சைகள் என 223 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 25 பேர் பெண்கள் ஆவர். இந்த தொகுதிகளை சேர்ந்த 40.78 லட்சம் வாக்காளர்கள் இவர்களின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறார்கள். இவர்கள் வாக்களிப்பதற்காக 5,304 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த தொகுதிகளில் கடந்த சில நாட்களாக தீவிர பிரசாரம் களை கட்டியிருந்தது. நக்சலைட்டு ஆதிக்கம் நிறைந்த இந்த பகுதிகளில் வன்முறை சம்பவங்களும் நிகழ்ந்தன. ஆனாலும் ஆளும் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக மல்லுக்கட்டின. பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் அடிக்கடி இங்கு படையெடுத்தனர்.

இதைப்போல காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மூத்த தலைவர்களும் அரசை தக்க வைக்க மாநிலத்தில் முகாமிட்டு வாக்கு சேகரித்தனர். இப்படி 20 தொகுதிகளிலும் அனல் பறந்த பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.

மாநிலத்தில் முதற்கட்ட தேர்தல் நாளை நடைபெற இருக்கும் நிலையில், ஆளும் காங்கிரஸ் கட்சி நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதில் சிலிண்டருக்கு ரூ.500 மானியம், ஒரு குவிண்டால் நெல் ரூ.3,200-க்கு கொள்முதல் உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன.

தேர்தல் பிரசாரம் ஓய்ந்துள்ள தொகுதிகளில் அமைதியான வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் முடுக்கி விட்டு உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் தேர்தல் பணியாளர்கள் என அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாநிலத்தின் மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு வருகிற 17-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாளை சட்டசபை தேர்தல் நடைபெறும் சத்தீஷ்காரின் 20 தொகுதிகள் மற்றும் மிசோரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

மக்கள் அமைதியாகவும், சுதந்திரமாகவும் வாக்களிப்பதற்கு வசதியாக அந்தந்த மாநில போலீசாருடன் இணைந்து துணை ராணுவமும் களத்தில் இறக்கப்பட்டு இருக்கின்றன. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் டிசம்பர் 3-ந்தேதி எண்ணப்படுகின்றன.


Next Story