சத்தீஷ்கார்: பல மீட்டர் தூரம் ரோஜா இதழ்களை தூவி பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர்களுக்கு வரவேற்பு


சத்தீஷ்கார்:  பல மீட்டர் தூரம் ரோஜா இதழ்களை தூவி பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர்களுக்கு வரவேற்பு
x

சத்தீஷ்காரில் காங்கிரஸ் கட்சியின் 85-வது மாநாட்டில் பங்கேற்க வருகை தரும் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர்களுக்கு பல மீட்டர் தூரம் ரோஜா இதழ்களை தூவி வரவேற்பு வழங்கப்பட்டது.


ராய்ப்பூர்,


சத்தீஷ்காரின் நவாராய்ப்பூர் நகரில் அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85-வது மாநாடு 3 நாட்கள் நடைபெறுகிறது. இதன்படி, கூட்டம் நேற்று தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் இந்த மூன்று நாள் மாநாட்டில் பங்கேற்று வருகின்றனர்.

இதனை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் இன்று கூட்டத்தில் உரையாற்ற உள்ளனர்.

இதேபோன்று கூட்டத்தில் பங்கேற்க அக்கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி இன்று ராய்ப்பூர் நகருக்கு விமானத்தில் வந்திறங்கினார். அவரை சத்தீஷ்கார் முதல்-மந்திரி பூபேஷ் பாகல் முறைப்படி வரவேற்றார்.

இதனையொட்டி, மாநாட்டில் பங்கேற்க வருகை தந்த பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களை வரவேற்கும் வகையில், வழியெங்கும் பல மீட்டர் தொலைவுக்கு ரோஜா இதழ்களை தூவி சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.

கட்சியின் மாநாட்டில் இன்று அரசியல் மற்றும் பொருளாதாரம் சார்ந்த விவகாரங்களில் மேற்கொள்ள வேண்டிய தீர்மானங்கள் பற்றியும் ஆலோசிக்கப்பட உள்ளன. கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாளை முக்கிய உரையாற்றுகிறார்.

இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சிக்குள் அமைப்பு ரீதியாக செய்ய வேண்டிய சில மாற்றங்கள் குறித்து முடிவு செய்யப்படுகிறது. அதேநேரம் நடப்பு ஆண்டில் நடக்க உள்ள 9 மாநில சட்டசபை தேர்தல், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்கான கூட்டணி உள்ளிட்டவை பற்றி மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.

அதற்கு முன் நேற்று நடந்த முதல் நாள் தொடக்க கூட்டத்தில் பேசிய கட்சி தலைவர் கார்கே, சட்டசபை தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலில் எதிர்கொள்ள வேண்டிய சவால்களை குறிப்பிட்டு பேசினார்.

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசை சாடிய அவர் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனம் அச்சுறுத்தலில் உள்ளது என தாக்கி பேசினார். இதுதவிர, பிரதமர்கள் மற்றும் கட்சி தலைவர்களாக இருந்தவர்களுக்கு கட்சியின் காரிய கமிட்டியில் நிரந்தர இடம் வழங்குவதற்கு ஏற்ப கட்சியின் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட கூடும் என்றும் கூறப்படுகிறது.


Next Story