சப்-இன்ஸ்பெக்டர் நியமன தேர்வு முறைகேடு குறித்து விவாதம்: முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை-சித்தராமையா கடும் வாக்குவாதம்


சப்-இன்ஸ்பெக்டர் நியமன தேர்வு முறைகேடு குறித்து விவாதம்: முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை-சித்தராமையா கடும் வாக்குவாதம்
x

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நியமன தேர்வு முறைகேடு விவாதத்தின்போது, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் சித்தராமையா இடையே கடும் வாக்குவாதம் உண்டானதால் கா்நாடக சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூரு:

பெரிய அளவில் லஞ்சம்

கர்நாடக சட்டசபையில் நேற்று உணவு இடைவேளைக்கு பிறகு சபை கூடியதும், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நியமன தேர்வு முறைகேடு குறித்து விவாதிக்க அனுமதி கோரினார். அதற்கு விதி எண் 69-ன் கீழ் விவாதிக்க சபாநாயகர் காகேரி அனுமதி வழங்கினார். இதில் சித்தராமையா பேசியதாவது:-

கர்நாடகத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நியமன தேர்வு முறைகேடு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. கூடுதல் டி.ஜி.பி. உள்பட போலீஸ் அதிகாரிகள் மற்றும் லஞ்சம் கொடுத்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த முறைகேட்டில் பெரிய அளவில் லஞ்சம் கைமாறியுள்ளது. இதன் காரணமாக அரசு சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை ரத்து செய்வதாக ஏற்கனவே அறிவித்தது. மறுதேர்வு நடத்துவதாக கூறியுள்ளது.

மோசமான ஊழல் அரசு

இதனால் நேர்மையான முறையில் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் பெங்களூரு சுதந்திர பூங்காவில் போராட்டம் நடத்துகிறார்கள். அவர்களை நான் இன்று (நேற்று) நேரில் சந்தித்து பேசினேன். அவர்கள் தங்களின் கஷ்டங்களை, வேதனைகளை கூறினர். அதுபற்றி பேசுவதற்கு பா.ஜனதாவினர் குறுக்கீடு செய்கிறார்கள். இது மிக மோசமான ஊழல் அரசு. உள்ளது உள்ளபடி கூறினால் பசவராஜ் பொம்மைக்கு கோபம் வருகிறது.

எதிர்க்கட்சி தலைவர் பேசுவதை நீங்கள் பொறுமையாக கேட்க வேண்டும். அடிக்கடி குறுக்கிடுவது சரியல்ல. நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, எதிர்க்கட்சி தலைவர் பேசினால் குறுக்கிட்டு பேச மாட்டேன். முதல்-மந்திரி பதவியில் இருப்பவர்களுக்கு பொறுமை இருக்க வேண்டும். நான் அரசியலில் கடைசி காலத்திற்கு வந்துவிட்டேன். ஆனால் நீங்கள் இன்னும் நீண்ட காலம் அரசியலில் இருக்க கூடியவர். சற்று பொறுமையை கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

அப்போது முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை குறுக்கிட்டு பேசும்போது, "உங்கள் ஆட்சியில் பணி நியமனங்களில் முறைகேடு நடைபெற்றன. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நியமன முறைகேடு குறித்து நீங்கள் விசாரணைக்கு உத்தரவிடவில்லையா?" என்றார். அதற்கு சித்தராமையா, "எங்கள் ஆட்சியில் பணி நியமனங்களில் முறைகேடுகள் நடந்திருந்தால் நீங்கள் விசாரணை நடத்துங்கள். 3 ஆண்டுகளாக நீங்கள் ஏன் அமைதியாக இருந்தீர்கள். முறைகேடு குறித்து அப்போதே கேள்வி எழுப்பாமல் இருந்தது ஏன்?" என்றார்.

சபையில் பரபரப்பு

அப்போது முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கும், சித்தராமையாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் உண்டானது. பா.ஜனதா உறுப்பினர்கள் பசவராஜ் பொம்மைக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். அதே போல் காங்கிரஸ் உறுப்பினர்கள் சித்தராமையாவை ஆதரித்து குரலை உயர்த்தி பேசினர். இதனால் சபையில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது. அப்போது சபையில் பரபரப்பு உண்டானது.

மீண்டும் பேசத்தொடங்கிய சித்தராமையா, "முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள், தங்களால் லஞ்சம் கொடுக்க முடியாது. அந்த அளவுக்கு பணம் இல்லை. எங்கள் பெற்றோர் சாகுபடி செய்த உணவு தானியங்கள் என்னிடம் கொடுத்து அரசிடம் கொண்டு சேர்க்குமாறு கூறினர். அதனால் அந்த உணவு தானிய தொகுப்பை இங்கு காலையில் கொண்டு வந்தேன்" என்றார்.


Next Story