ராம்நாத் கோவிந்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


ராம்நாத் கோவிந்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
x

முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட திரவுபதி முர்மு வெற்றிபெற்றார். இதன் மூலம் நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாட்டில் பழங்குடி இனத்தை சேர்ந்த முதல் ஜனாதிபதி மற்றும் 2-வது பெண் ஜனாதிபதி என்ற பெருமையை திரவுபதி முர்மு பெறுகிறார்.

இந்த நிலையில், புதிய ஜனாதிபதியாக திரவுபதி முர்மு இன்று பதவியேற்கிறார். டெல்லி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் புதிய ஜனாதிபதி பதவி ஏற்பு விழா இன்று காலை 10.15 மணிக்கு நடைபெறுகிறது. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி. ரமணா நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்முவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

இதற்கிடையில், புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள திரவுபதி முர்முவுக்கு வழிவிட்டு மாளிகையிலிருந்து ராம்நாத் கோவிந்த் நேற்று வெளியேறினார்.

இந்நிலையில், ராம்நாத் கோவிந்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதிய கடிதத்தில்,

"ஜனாதிபதியாக வெற்றிகரமாக தனது பணியை நிறைவு செய்துள்ளீர்கள். ஜனாதிபதியாக தமிழகத்திற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் அமைதியான வாழ்வு அமைந்திட வாழ்த்துக்கள். தங்களின் வளமான அனுபவத்தால் நாடு தொடர்ந்து பயன் பெறும் என நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story