பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கட்சிகளுக்கு தக்க பதிலடி


பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கட்சிகளுக்கு தக்க பதிலடி
x

சட்டசபையில் பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சிகளுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு:-

வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரியும், மாநில காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவக்குமார் உள்பட மந்திரிகள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் சித்தராமையா பேசியதாவது:-

கடந்த 2013-ம் ஆண்டு மக்களுக்கு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் காங்கிரஸ் அரசு அமைந்த பிறகு நிறைவேற்றப்பட்டது. ஆனால் முந்தைய பா.ஜனதா அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. 608 வாக்குறுதிகளில் 95 சதவீதம் அமல்படுத்தவே இல்லை. அதனால் நீங்கள், மக்களிடம் சென்று காங்கிரஸ் நிறைவேற்றியுள்ள திட்டங்களை தைரியமாக நெஞ்சை நிமிர்த்து பேச வேண்டும்.

ஒதுக்க முடியவில்லை

தற்போது நாம் மக்களுக்கு கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற தொடங்கியுள்ளோம். முதல் கட்டமாக 5 உத்தரவாத திட்டங்களை அமல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். உத்தரவாத திட்டங்களின் பயனை பா.ஜனதாவினரும் பெறுகிறார்கள். இதை நாம் வரவேற்க வேண்டும். உத்தரவாத திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது சவாலாக இருந்தது. அதனால் நான் அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தேன்.

அதனால் உங்களை சந்திக்க அதிக நேரத்தை என்னால் ஒதுக்க முடியவில்லை. பா.ஜனதாவின் பொய்கள், ஜனதா தளம் (எஸ்) கட்சியின் நாடகத்திற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.


Next Story