சிக்கமகளூரு நகர காங்கிரஸ் தலைவர் திடீர் ராஜினாமா; 'கட்சிக்குள் ஒற்றுமை இல்லை' என பேட்டி
காங்கிரஸ் கட்சியில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதால் சிக்கமகளூரு நகர காங்கிரஸ் தலைவர் திடீரென பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் அவர், கட்சிக்குள் ஒற்றுமை இல்லை என தெரிவித்துள்ளார்.
சிக்கமகளூரு;
காங்கிரஸ் கட்சியினர் மோதல்
சிக்கமகளூரு டவுனில் உள்ள மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் சந்தோஷ் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில், இளைஞர் காங்கிரஸ் செயலாளராக உள்ள நித்தீசை, அப்பதவியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்ததாக தெரிகிறது. இதனை கண்டித்து நித்தீசின் ஆதரவாளர்கள் வாக்குவாதம் செய்தனர்.
அப்போது நித்தீசின் ஆதரவாளர்களுக்கும், சந்தோசின் ஆதரவாளர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, மோதலாக மாறியது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
அங்கிருந்தவர்கள் இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர். இந்த மோதலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.காங்கிரஸ் கட்சியினர் மோதிக் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ராஜினாமா
காங்கிரஸ் கட்சியினரின் இந்த மோதலால் சிக்கமகளூரு நகர காங்கிரஸ் தலைவர் மஞ்சேகவுடா அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் அவர், தனது நகர காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
இதுகுறித்து மஞ்சேகவுடா கூறுகையில், சிக்கமகளூருவில் காங்கிரஸ் கட்சிக்குள் ஒற்றுமை இல்லை. இவ்வாறு சண்டையிட்டு கொண்டிருந்தால் அடுத்த ஆண்டு (2023) நடக்கும் சட்டசபை தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ள முடியும். இதனால் தான் எனது பதவியை ராஜினாமா செய்துள்ளேன் என்றார்.