யானை தாக்கி பெண் பலி: தாமதமாக பார்வையிட வந்த எம்.எல்.ஏ மீது கிராம மக்கள் தாக்குதல்


யானை தாக்கி பெண் பலி: தாமதமாக பார்வையிட வந்த எம்.எல்.ஏ மீது கிராம மக்கள் தாக்குதல்
x

Image Courtesy: ANI

தினத்தந்தி 21 Nov 2022 6:13 AM GMT (Updated: 21 Nov 2022 6:14 AM GMT)

யானை தாக்கி பெண் உயிரிழந்தது தொடர்பாக எம்.எல்.ஏ சரியான பதிலளிக்கவில்லை என கூறி கிராம மக்கள் அவரை தாக்கினர்.

சிக்கமகளூரு,

கர்நாடகாவின் சிக்கமகளூர் மாவட்டத்தின் மூடிகெரே தாலுகாவில் உள்ள ஹுல்மனே குந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ். விவசாயி. இவரது மனைவி ஷோபா (வயது 40). நேற்று காலை இவர்கள் 2 பேரும் வனப்பகுதியையொட்டி உள்ள தங்கள் தோட்டத்துக்கு சென்று மாடுகளுக்கு புல் அறுத்து கொண்டிருந்தனர். அப்போது வனப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று தோட்டத்துக்குள் புகுந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த 2 பேரும் அங்கிருந்து தப்பியோடினர். ஆனாலும் அந்த யானை, 2 பேரையும் விடாமல் விரட்டி சென்றது. அப்போது ஷோபா யானையிடம் சிக்கி கொண்டார். அவரை யானை தும்பிக்கையால் தூக்கி வீசியது. பின்னர் அவரை காலால் மிதித்தது. இதில் ஷோபா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ஹுல்மனே கிராமத்தில் கடந்த சில மாதங்களாக காட்டு யானை அட்டகாசம் அதிகமாக உள்ளதாகவும் அதனை தடுக்க வனத்துறை தவறிவிட்டதாகவும் எனவே பெண்ணின் உயிரிழப்பிற்கு மாநில அரசு தான் காரணம் என கிராம மக்கள் குற்றம் சுமத்தினர்.

இந்த நிலையில், யானை தாக்கி பெண் உயிரிழந்ததை தொடர்ந்து முடிகெரே தொகுதி பாஜக எம்.எல்.ஏ குமாரசாமி, ஹுல்மனே கிராமத்தை பார்வையிட சென்றார்.

அப்போது யானை தாக்கி பெண் உயிரிழந்தது தொடர்பாக எம்.எல்.ஏ சரியான பதிலளிக்கவில்லை என கூறி கிராம மக்கள் அவரை சூழ்ந்து கொண்டு தாக்க தொடங்கினர். அவரை விரட்டி விரட்டி தாக்கி அவரின் சட்டையை கிழித்தனர். இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தி பொதுமக்களிடம் இருந்து எம்.எல்.ஏ குமாரசாமியை அங்கிருந்து அழைத்து சென்றனர்.

இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story