தைவானுக்குள் போர் விமானங்களை அனுப்பி சீனா மிரட்டல்: பதற்றம் நீடிப்பு


தைவானுக்குள் போர் விமானங்களை அனுப்பி சீனா மிரட்டல்: பதற்றம் நீடிப்பு
x

கோப்புப்படம்

தைவானை மிரட்டும் விதமாக சீனா தனது போர் விமானங்கள் மற்றும் கப்பல்களை தைவானுக்குள் அனுப்பியதால் இரு நாடுகளிடையே பதற்றமான சூழல் நீடிக்கிறது.

தைபே,

பல தீவுகூட்டங்களை உள்ளடக்கிய சிறிய நாடான தைவான் 1949-ம் ஆண்டில் இருந்து தனி நாடாக இயங்கி வருகிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசு அங்கு ஆட்சி செய்கிறது. ஆனால் தைவானை தனது மாகாணங்களில் ஒன்றாக கருதும், சீனா தைவானை தன்னுடன் இணைத்துக்கொள்வதற்கு துடிக்கிறது. சீனாவின் இந்த ஆக்கிரமிப்பு முயற்சிக்கு அமெரிக்கா பெரும் தடையாக இருந்து வருகிறது.

தைவானை ஆக்கிரமிக்க சீனா ராணுவ நடவடிக்கை எடுத்தால், அதில் அமெரிக்கா தலையிடும் அபாயம் உள்ளது.

இதனால் தைவானுடன் அமெரிக்கா நெருக்கம் காட்டுவதை சீனா தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

சுற்றிவளைத்து பயிற்சி

இந்த சூழலில் சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தைவான் அதிபர் சாய் இங் வென்னை அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதனால் கடும் கோபமடைந்த சீனா, தைவான் அதிபர் சாய் இங் வென் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய சில மணி நேரங்களிலேயே தைவானை சுற்றி வளைத்து போர் பயிற்சியை தொடங்கியது. இன்று (திங்கட்கிழமை) இந்த போர்ப்பயிற்சி தொடரும் என தெரிவித்துள்ள சீனா, தைவானின் முக்கிய இலக்குகளை குறிவைத்து தாக்குவதற்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

தைவானை மிரட்டும் சீனா

இதனிடையே சீனாவின் போர் பயிற்சியால் ஏற்பட்டுள்ள பதற்றத்துக்கு மத்தியில் அமெரிக்க நாடாளுமன்ற வெளியுறவுக் குழுவின் தலைவர் மைக்கேல் மெக்கால் தலைமையில் அந்த நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழு நேற்று முன்தினம் தைவான் சென்றது.

அந்த குழு நேற்று முன்தினம் தலைநகர் தைபேயில் அதிபர் சாய் இங் வென்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. இது சீனாவை மேலும் கோபமடைய செய்தது.

இதை தொடர்ந்து, தைவானை மிரட்டும் விதமாக சீனா தனது போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை தைவான் எல்லைக்குள் அனுப்பியது.

அதன்படி நேற்று ஒரே நாளில் சீனா 71 போர் விமானங்களையும், 9 போர்க்கப்பல்களையும் தைவானை நோக்கி அனுப்பியதாக தைவான் ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஜே-10, 'ஜே-11' மற்றும் 'ஜே-16' ரக போர் விமானங்கள் மற்றும் எச்-6 குண்டு வீச்சு விமானங்கள் உள்பட 71 சீன போர் விமானங்கள், தைவான் ஜலசந்தியின் இடைநிலைக்கோடு பகுதியை கடந்தன. நிலைமையைக் கண்காணிக்க தைவான் ராணுவம் வான் மற்றும் கடல் ரோந்துகளை வலுப்படுத்தி உள்ளது'' என கூறப்பட்டுள்ளது.


Next Story