பட்டாசு வெடிவிபத்து குறித்து சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவு; முதல்-மந்திரி சித்தராமையா அறிவிப்பு


பட்டாசு வெடிவிபத்து குறித்து சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவு; முதல்-மந்திரி சித்தராமையா அறிவிப்பு
x
தினத்தந்தி 8 Oct 2023 6:45 PM GMT (Updated: 8 Oct 2023 6:45 PM GMT)

பெங்களூரு அருகே நடந்த பட்டாசு வெடிவிபத்து குறித்து சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டு முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.

பெங்களூரு:

பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு குடோனில் நேற்று முன்தினம் வெடி விபத்து நடந்திருந்தது.இதில், 14 பேர் உடல் கருகி பலியாகி இருந்தார்கள். மேலும் சிலர் பலத்த தீக்காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து அத்திப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.

பட்டாசு விபத்து நடந்ததும் நேற்று முன்தினம் இரவே துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி இருந்தார். அத்துடன் பலியானவர்களின் குடும்பத்திற்கு கர்நாடக அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்திருந்தார். அதே நேரத்தில் நேற்று முன்தினம் இந்த சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்திருந்த முதல்-மந்திரி சித்தராமையா, மறுநாள்(அதாவது நேற்று) நேரில் சென்று பார்வையிடுவதாகவும் தெரிவித்து இருந்தார்.

அதன்படி, பட்டாசு வெடிவிபத்து நடந்த பகுதிக்கு நேற்று காலையில் முதல்-மந்திரி சித்தராமையா சென்றார். அவருடன், துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், மந்திரிகள் எம்.சி.சுதாகர், ராமலிங்க ரெட்டி, பைரதி சுரேஷ், எம்.எல்.ஏ.க்களான எஸ்.டி.சோமசேகர், சிவண்ணா ஆகியோர் உடன் சென்றிருந்தார்கள். பட்டாசு விபத்து நடந்த குடோன் உள்ளிட்ட ஒவ்வொரு பகுதிகளையும் முதல்-மந்திரி சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் பார்வையிட்டார்கள்.

பின்னர் அங்கிருந்த தீயணைப்பு துறை போலீஸ் டி.ஜி.பி. கமல்பந்திடம், பட்டாசு வெடிவிபத்திற்கான காரணம், பலியானவர்கள் பற்றிய தகவல்கள் உள்ளிட்டவை குறித்து முதல்-மந்திரி சித்தராமையா கேட்டு அறிந்து கொண்டார். அதன்பிறகு, முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

தீபாவளி பண்டிகைக்காக முறையான உரிமம் பெற்று பட்டாசுகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். நேற்று (நேற்று முன்தினம்) அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு குடோனில் 3 மணியளவில் வெடி விபத்து நடந்து, தீப்பிடித்துள்ளது. பட்டாசுகள் வைக்கப்பட்டு இருந்த கடையிலும், குடோனிலும் முன் எச்சரிக்கையாக எந்த விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இதுபோன்ற பாதுகாப்புகள் இல்லாத காரணத்தால் இவ்வளவு பெரிய சம்பவம் நடந்துள்ளது. குடோனில் உரிமையாளர் பட்டாசு விற்பனை மற்றும் சேமித்து வைப்பதற்காக தனித்தனியாக உரிமம் பெற்றிருக்கிறார். கடந்த மாதம் (செப்டம்பர்) 13-ந் தேதி கூட ஒரு உரிமத்தை புதுப்பித்துள்ளனர். அது வருகிற 2028-ம் ஆண்டு அக்டோபர் 31-ந் தேதி வரை தொடர்ந்து அமலில் இருக்கும்.

ஜெயம்மா என்பவருடைய இடத்தை வாடகைக்கு எடுத்து பட்டாசு விற்பனை மற்றும் குடோன் நடத்தி வந்துள்ளனர். பட்டாசு விபத்தில் பலியானவர்கள் தமிழ்நாடு தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள். பலியானவர்களில் சிலர் மாணவர்கள் ஆவார்கள். விடுமுறை நாட்களில் வந்து இந்த பட்டாசு குடோன்களில் வேலை செய்து வந்துள்ளனர்.

மேலாளர் மட்டும் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்திருக்கிறார். மற்ற அனைவரும் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்துள்ளனர். பட்டாசு விற்பனை செய்ய போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையிடம் இருந்து அனுமதி பெற்றிருப்பதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அனுமதி வழங்கும் போது சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து, அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் பரிசீலனை நடத்தி இருக்க வேண்டும். அது நடைபெறவில்லை. எனவே பட்டாசு விபத்து குறித்து சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனே். விசாரணைக்கு பின்பு இந்த சம்பவத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி.

பட்டாசு விபத்தில் பலியான 14 பேரின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை செலவையும் அரசே ஏற்றுக் கொள்ளும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து முதல்-மந்திரி சித்தராமையா, வெடிவிபத்தில் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று பார்த்தார். அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது அவர்களது குடும்பத்தினரை சந்தித்து அவர்களுக்கும் ஆறுதல் கூறினார். அதேபோல் வெடிவிபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அப்போது தனது மகனை இழந்த ஒரு பெண் கண்ணீர் விட்டு கதறி, கதறி அழுதார். அவரை முதல்-மந்திரி சித்தராமையா தேற்றி ஆறுதல் கூறிய காட்சி பரிதாபமாக இருந்தது. இந்த சந்தர்ப்பத்தில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story