ஐகோர்ட்டு அனுமதி வழங்கியதை தொடர்ந்து சி.இ.டி. தேர்வு மதிப்பெண் பட்டியல் வருகிற 29-ந்தேதி வெளியீடு


ஐகோர்ட்டு அனுமதி வழங்கியதை தொடர்ந்து சி.இ.டி. தேர்வு மதிப்பெண் பட்டியல் வருகிற 29-ந்தேதி வெளியீடு
x
தினத்தந்தி 24 Sep 2022 6:45 PM GMT (Updated: 24 Sep 2022 6:46 PM GMT)

கா்நாடக ஐகோர்ட்டு அனுமதி வழங்கியதை தொடர்ந்து சி.இ.டி. தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் வருகிற 29-ந்தேதி வெளியிடப்படுகிறது. அடுத்த மாதம் 3-ந் தேதி கவுன்சிலிங் நடைபெற உள்ளது.

பெங்களூரு:

மாணவர்கள் வழக்கு

கர்நாடகத்தில் என்ஜினீயரிங் உள்ளிட்ட தொழில் படிப்புக்கான சி.இ.டி. தேர்வுகள் நடத்தப்பட்டு, அதற்கான மதிப்பெண் பட்டியலை சமீபத்தில் உயர்கல்வித்துறை வெளியிட்டு இருந்தது. அந்த மதிப்பெண் பட்டியலில் 2021-ம் ஆண்டில் பி.யூ.சி.யில் தேர்ச்சி பெற்று, இந்த ஆண்டு நடந்த சி.இ.டி. தேர்வில் கலந்துகொண்ட மாணவர்களின் மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படாமல் இருந்தது. கொரோனா காரணமாக பி.யூ.சி. முதலாம் ஆண்டில் எடுத்த மதிப்பெண்களே, 2-ம் ஆண்டுக்கும் வழங்கப்பட்டு இருந்ததால், அந்த மதிப்பெண்ணை சி.இ.டி. தேர்வில் உயர் கல்வித்துறை பரிசீலிக்காமல் இருந்தது.

இதனை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில், 2021-ம் ஆண்டில் தேர்ச்சி பெற்று, இந்த ஆண்டு சி.இ.டி. தோ்வு எழுதி இருந்த மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டு, சி.இ.டி. தேர்வுக்கான மதிப்பெண் பட்டியலுக்கு தடை விதித்து உத்தரவிட்டு இருந்தது. இதனை எதிர்த்து கர்நாடக ஐகோா்ட்டில் அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்திற்கு தீர்வு காண அரசு சார்பில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் கர்நாடக ஐகோர்ட்டில் இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை அளித்திருந்தனர்.

29-ந் தேதி சி.இ.டி. தேர்வு முடிவு

அந்த அறிக்கையில், 2021-ம் ஆண்டு பி.யூ.சி.யில் தேர்ச்சி பெற்று, சி.இ.டி. தோ்வில் பங்கேற்ற மாணவர்கள், பி.யூ.சி. தேர்வில் அவர்கள் எடுத்த மதிப்பெண்களில் கணிதத்தில் 7, இயற்பியலில் 6, வேதியலில் 5 மதிப்பெண் குறைக்கலாம் என்றும் தெரிவித்திருந்தது. இதற்கு அரசும், கர்நாடக ஐகோர்ட்டும் அனுமதி வழங்கியது. அதாவது, பாதிக்கப்பட்ட மாணவர்கள் தொடர்ந்த வழக்கில், அரசால் அமைக்கப்பட்ட குழுவினர் சிபாரிசு ஏற்றுக் கொள்வதாகவும், இதன் அடிப்படையில் சி.ஐ.டி. தேர்வில் மதிப்பெண்களை கணக்கீட்டு முடிவுகளை வெளியிடலாம் என்றும் உயர்கல்வித்துறைக்கு கர்நாடக ஐகோர்ட்டு அனுமதி வழங்கி இருந்தது.

இதையடுத்து, வருகிற 29-ந் தேதி என்ஜினீயரிங் உள்ளிட்ட தொழில்படிப்புகளுக்கான சி.இ.டி. தேர்வுகளுக்கான மதிப்பெண் பட்டியல் வருகிற 29-ந் தேதி வெளியிடப்படும் என்றும், அடுத்த மாதம் (அக்டோபர்) 3-ந் தேதி முதற்கட்ட கவுன்சிலிங் நடைபெறும் என்றும் உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் அறிவித்துள்ளார். இதன் காரணமாக நீண்ட நாட்களாக நீடித்து வந்த சி.இ.டி. மதிப்பெண் விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது.


Next Story