சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைத்தது ஏன்?


சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைத்தது ஏன்?
x

சான்ட்ரோ ரவி மீதான வழக்கு விசாரணையை சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைத்தது ஏன்? என்பது குறித்து போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா விளக்கம் அளித்துள்ளார்.

பெங்களூரு:-

அரக ஞானேந்திரா மீது குற்றச்சாட்டு

மைசூருவை சேர்ந்தவர் சான்ட்ரோ ரவி என்ற மஞ்சுநாத்(வயது 51). விபசார கும்பலின் தலைவன் போல் செயல்பட்ட இவர், போலீஸ் அதிகாரிகளுக்கு சட்டவிரோத முறையில் பணி இடமாற்றம் பெற்றுத்தந்து வந்துள்ளார். முக்கிய பிரமுகர்களுக்கு இளம்பெண்களை சப்ளை செய்ததாகவும் சான்ட்ரோ ரவி மீது குற்றச்சாட்டு உள்ளது. அதே நேரத்தில் போலீஸ் அதிகாரிகளிடம் இருந்து பெறும் லஞ்சத்தை, மந்திரி அரக ஞானேந்திராவிடம் கொடுத்து வருவதாக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி குற்றச்சாட்டு கூறியுள்ளார். சான்ட்ரோ ரவியை கைது செய்து சிறையில் அடைத்திருப்பதாகவும், அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்கவில்லை என்றும் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறி இருந்தார். இந்த நிலையில், சான்ட்ரோ ரவி மீதான வழக்கு சி.ஐ.டி. போலீசாருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெங்களூருவில் நேற்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

பாரபட்சம் இன்றி விசாரணை

சான்ட்ரோ ரவி மீதான வழக்கை மைசூரு போலீசார் விசாரித்தனர். அவர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து பாரபட்சம் இல்லாமலும், நேர்மையான முறையிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதற்காக, சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சான்ட்ரோ ரவி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது. இந்த வழக்கு விசாரணை மீது யாருக்கும் எந்த விதமான சந்தேகமும் ஏற்படக்கூடாது என்பதற்காகவும் சி.ஐ.டி. விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சான்ட்ரோ ரவி மீது வெறும் விசாரணை மட்டும் நடைபெறாமல், அவர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கான சாட்சி, ஆதாரங்களை திரட்டுவது, தண்டனை பெற்றுக் கொடுப்பதும் அரசின் பொறுப்பாகும். சான்ட்ரோ ரவி மீதான குடும்ப பிரச்சினை தவிர மற்ற மோசடி, கொலை மிரட்டல், விபசார தொழில் உள்ளிட்ட வழக்குகள் குறித்து சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்துவார்கள். சான்ட்ரோ ரவி மீதான வழக்கை விசாரிப்பதுடன், அவருக்கு பின்னணியில் இருந்தவர்கள் யார்? என்பதை கண்டறிவதும் முக்கியம்.

கருப்பு மை பூச முயற்சி

கடந்த 20 ஆண்டுகளாக அவர் யாருடன் எல்லாம் தொடர்பில் இருந்தார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும். இதுபோன்ற பல்வேறு காரணங்களால் சான்ட்ரோ ரவி மீதான வழக்கு விசாரணையை சி.ஐ.டி. வசம் அரசு ஒப்படைத்திருக்கிறது. சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைத்ததற்கு சான்ட்ரோ ரவியின் வக்கீல் எதிர்ப்பு தெரிவித்திருப்பது பற்றி கேட்கிறீர்கள்.

சான்ட்ரோ ரவி மீது தொடர்ந்து புகார்களும், குற்றச்சாட்டுகளும் வருகிறது. தேவையான ஆவணங்கள், சாட்சிகளை சி.ஐ.டி. போலீசார் திரட்டுவார்கள். இது ஒரு முக்கியமான வழக்கு ஆகும். முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி என் மீது குற்றச்சாட்டுகள் கூறி இருக்கிறார். நேர்மையான முறையில் பணியாற்றினால், அவர்களுக்கு எதிராக கருப்பு மை பூச முயற்சிகள் நடக்க தான் செய்யும்.

இவ்வாறு அரக ஞானேந்திரா கூறினார்.


Next Story