லிங்காயத்-ஒக்கலிகர் சமூகங்களுக்கு போலி இடஒதுக்கீடு வழங்கியது ஏன்?


லிங்காயத்-ஒக்கலிகர் சமூகங்களுக்கு போலி இடஒதுக்கீடு வழங்கியது ஏன்?
x
தினத்தந்தி 25 April 2023 6:45 PM GMT (Updated: 25 April 2023 6:46 PM GMT)

லிங்காயத்-ஒக்கலிகர் சமூகங்களுக்கு போலி இடஒதுக்கீடு வழங்கியது ஏன்? என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

பெங்களூரு:

லிங்காயத்-ஒக்கலிகர் சமூகங்களுக்கு போலி இடஒதுக்கீடு வழங்கியது ஏன்? என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

தோல்வி அடைந்துவிட்டது

கர்நாடகத்தில் லிங்காயத், ஒக்கலிகர், தலித், பழங்குடியின சமூகங்களுக்கு உயர்த்தப்பட்ட இட ஒதுக்கீட்டிற்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது. இதன் மூலம் பா.ஜனதா அரசு வழங்கியது போலி இடஒதுக்கீடு என்பது மீண்டும் ஒருமுறை சுப்ரீம் கோர்ட்டில் நிரூபணம் ஆகியுள்ளது. பசவராஜ் பொம்மை அரசு உரிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்வதில் தோல்வி அடைந்துவிட்டது.

அதனால் பசவராஜ் பொம்மை முதல்-மந்திரி பதவியில் ஒரு நிமிடம் கூட நீடிக்க கூடாது. உடனே அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா கா்நாடகத்திற்கு வரக்கூடாது. லிங்காயத், ஒக்கலிகர், தலித், பழங்குடியின சமூகங்களுக்கு போலியான இட ஒதுக்கீடு வழங்கியது ஏன்?. சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கில் இட ஒதுக்கீட்டை நியாயப்படுத்த தவறியது ஏன்?.

மன்னிப்பு கேட்பாரா?

இந்த வழக்கில் கர்நாடக அரசு சரியான முறையில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யாதது ஏன்?. நாடாளுமன்றத்தில் தலித், பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு உயர்வை நிராகரித்தது ஏன்?. மொத்த இட ஒதுக்கீட்டு அளவை உயர்த்த அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய மறுப்பது ஏன்?. ஓட்டுகளை கவர சிறுபான்மையினரின் இட ஒதுக்கீட்டை இலக்காக கொண்டு பா.ஜனதா செயல்படுவது ஏன்?. இட ஒதுக்கீடு பெயரில் தவறான முடிவுகளை எடுத்ததற்காக பிரதமர் மோடி கர்நாடக மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்பாரா?.

இவ்வாறு ரன்தீப்சிங் சுர்ஜேவாலா குறிப்பிட்டுள்ளார்.


Next Story