கூட்டுறவு வங்கிகள் நவீன முறைகளை பின்பற்ற வேண்டும் - அமித்ஷா வலியுறுத்தல்


கூட்டுறவு வங்கிகள் நவீன முறைகளை பின்பற்ற வேண்டும் - அமித்ஷா வலியுறுத்தல்
x

திறமையான இளைஞர்களை கூட்டுறவு வங்கிகள் பணிக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என அமித்ஷா கூறியுள்ளார்.

புதுடெல்லி,

தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளுடன் போட்டியிடுவதற்காக நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் நவீன முறைகளை பின்பற்ற வேண்டும் என்று அமித்ஷா கூறினார்.

டெல்லியில் நடந்த நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் நிகழ்ச்சியில், மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

"நாடு முழுவதும் 1,534 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள், 35 பன்மாநில கூட்டுறவு வங்கிகள், 580 பன்மாநில கூட்டுறவு கடன் சங்கங்கள், 22 மாநில கூட்டுறவு அமைப்புகள் ஆகியவை உள்ளன. பரவலாக வங்கிகள் இருந்தபோதிலும், சீரற்று காணப்படுகின்றன.

நகர்ப்புறத்தில் கீழ்மட்டத்தில் இருப்பவர்களுக்கு கடன் கொடுப்பது நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள்தான். எனவே, அவை ஒவ்வொரு நகரிலும் ஒன்று இருக்க வேண்டும். நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு இந்த வங்கிகள் இப்போதும் அவசியமாக இருக்கின்றன. நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளை இரண்டாம் தரமாக நடத்த மாட்டோம்.

மேலும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுடனும், தனியார் வங்கிகளுடனும் போட்டியிடும் வகையில் இவ்வங்கிகள் இருக்க வேண்டும். அதற்காக சமச்சீரான வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். கட்டமைப்பு மாற்றங்களை செய்ய வேண்டும்.

நவீன வங்கிமுறைகளை பின்பற்ற வேண்டும். கணக்கு பணிகளை கணினிமயமாக்க வேண்டும். திறமையான இளைஞர்களை பணிக்கு தேர்ந்தெடுக்க வேண்டும். உபரி நிதியை கையாள நிபுணர்களை பணியமர்த்த வேண்டும். இந்த சீர்திருத்தங்களை செய்தால், தொடர்ந்து போட்டியில் இருக்கலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story