விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை


விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை
x

மங்களூருவில் தாய் திட்டியதால் விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

மங்களூரு:-

கல்லூரி மாணவி

தட்சிணா கன்னடா மாவட்டம் மங்களூரு கும்பால ஆஷ்ரயா காலனியை சேர்ந்தவர் சோமநாத். இவருடைய மனைவி பவ்யா. இவர்களது மகள் தன்யா (வயது 17). இவர் அந்தப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி கல்லூரிக்கு சென்ற தன்யா, மாலை நீண்ட நேரம் கழித்து வீட்டுக்கு வந்துள்ளார்.

இதுகுறித்து தன்யாவிடம் பவ்யா கேட்டுள்ளார். அப்போது தோழியின் வீட்டுக்கு சென்று வந்ததாக தன்யா கூறினார். அப்போது கல்லூரி முடித்து தோழி வீட்டுக்கு செல்வதை தன்னிடம் ஏன் போன் செய்து சொல்லவில்லை என தன்யாவை பவ்யா திட்டியதாக தெரிகிறது. மேலும் தன்யாவை அடித்ததாகவும் தெரிகிறது.

தற்கொலை

இதனால் தன்யா மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பவ்யா, பக்கத்து வீட்டுக்கு வேலைக்கு சென்றிருந்தார். இதனால் தன்யா மட்டும் தனியாக இருந்துள்ளார். அந்த சமயத்தில் தன்யா, பூச்சிக்கொல்லி மருந்து (விஷம்) குடித்தார். இந்த நிலையில், சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த பவ்யா, மகள் தன்யா வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தன்யாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தன்யா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து உல்லால் போலீசார் நடத்திய விசாரணையில், தாய் திட்டி, அடித்ததால் மனமுடைந்து தன்யா விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுதொடர்பாக உல்லால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story