கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம்; கேரள மந்திரி உறுதிமொழியை ஏற்று மாணவர்களின் போராட்டம் தற்காலிக நிறுத்தம்


கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம்; கேரள மந்திரி உறுதிமொழியை ஏற்று மாணவர்களின் போராட்டம் தற்காலிக நிறுத்தம்
x

கேரள கல்லூரி மாணவி தற்கொலை விவகாரத்தில் கல்வி மந்திரியின் உறுதிமொழியை ஏற்று மாணவர்களின் போராட்டம் தற்காலிக நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் திருப்புணித்துறா நகரில் திருவாங்குளம் பகுதியை சேர்ந்தவர் ஷ்ரத்தா (வயது 20). இவர் கஞ்சிரப்பள்ளி பகுதியில் உள்ள அமல்ஜோதி என்ஜினீயரிங் கல்லூரியில் உணவு தொழில்நுட்ப பிரிவில் 2-ம் ஆண்டு படித்து வந்து உள்ளார்.

விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில், கடந்த வெள்ளி கிழமை மாலையில், தனது அறையில் தூக்கில் தொங்கியபடி காணப்பட்டார். இதனால், சக தோழிகள் கூறிய தகவலை தொடர்ந்து, அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். ஆசிரியர்கள் மனதளவில் சித்ரவதை செய்ததனால், அவர் இந்த முடிவை எடுத்து இருக்கிறார் என மாணவியின் பெற்றோர் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

அவரது தோழிகள் மாணவியின் தந்தையிடம், மாணவியின் மொபைல் போனை பறித்து வைத்து கொண்ட பின்னர், துறை தலைவர் அவரை அறைக்கு அழைத்து பேசியுள்ளார். துன்புறுத்தியும் உள்ளார். மனதளவில் பாதிக்கப்பட்டு அவரது அறையில் இருந்து மாணவி வெளியேறினார் என்று கூறியுள்ளனர். இந்த தகவலை மாணவியின் தந்தை வேதனையுடன் கூறியுள்ளார்.

அவரது உறவினர்கள் கூறும்போது, மாணவி தற்கொலைக்கு முயன்றார் என கல்லூரி நிர்வாகம், மருத்துவரிடம் தகவல் கூறியிருந்தால், அதற்கேற்ற சிகிச்சை அளித்து இருப்பார்கள். ஆனால், அவள் மயக்கம் அடைந்து விட்டாள் என கூறியுள்ளனர் என்று குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளனர்.

கல்லூரி ஆய்வகத்தில் இருந்தபோது, அவர் மொபைல் போன் பயன்படுத்தி உள்ளார் என கூறப்படுகிறது. இதனால், அவரிடம் இருந்து மொபைல் போனை கல்லூரி அதிகாரிகள் பறித்து சென்று உள்ளனர். 2 நாட்களாக அதனை திருப்பி தரவில்லை.

பெற்றோரை வந்து வாங்கி கொள்ள கூறியுள்ளனர். அவர்கள் வந்தபோது, பருவதேர்வில் குறைவான மதிப்பெண்களை வாங்கியுள்ளார் என கூறியுள்ளனர். இதனால், ஷ்ரத்தா மனமுடைந்து போயுள்ளார் என கூறப்படுகிறது.

கல்லூரி அதிகாரிகளும், அவரை தற்கொலை செய்ய நெருக்கடி கொடுத்தனர் என அவரது தோழிகள் கூறியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மாணவர் அமைப்புகள் பேரணி மற்றும் போராட்டத்திலும் ஈடுபட்டன.

இதன் எதிரொலியாக, கல்லூரி காலவரையின்றி மூடப்பட்டு உள்ளதுடன், விடுதி மாணவிகளையும் வெளியேற்றி உள்ளது.

தொடர்ந்து, கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக இந்திய மாணவர் கூட்டமைப்பு (எஸ்.எப்.ஐ.) மற்றும் ஏ.பி.வி.பி. உள்ளிட்ட மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைக்க முயன்றனர். இதனால், போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்த நிலையில், கேரள உயர் கல்வி மந்திரி ஆர். பிந்து, மாணவர்கள் மற்றும் அமல்ஜோதி கல்லூரி நிர்வாகம் ஆகியோரை தனியாக அழைத்து கூட்டம் நடத்தியுள்ளார்.

இதன்பின்னர், பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது. இதனால், மாணவர்களின் போராட்டம் தற்காலிக நிறுத்தம் செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி மாணவர்கள் கூறும்போது, கல்லூரியில் இருந்து வார்டன் தற்காலிக அடிப்படையில் நீக்கப்படுவார் என மந்திரி உறுதிமொழி அளித்து உள்ளார்.

இந்த வழக்கை குற்றப்பிரிவு விசாரணை மேற்கொள்ளும் என அவர் உறுதி கூறியுள்ளார். அதனால், போராட்டம் தற்காலிக நிறுத்தம் செய்யப்படுகிறது என்று கூறியுள்ளனர்.


Next Story